குஜராத் மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் சாலைகளில் உள்ள அசைவ உணவு வண்டிகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ள சூழலில், மக்களின் வெவ்வேறு உணவுப் பழக்கங்களால் மாநில அரசுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்று குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் தெரிவித்தார்.
இது தொடர்பாக பேசிய முதல்வர், “சிலர் சைவ உணவை உண்கிறார்கள், சிலர் அசைவ உணவை உண்கிறார்கள், பாஜக அரசுக்கு இதில் எந்தப் பிரச்னையும் இல்லை. குறிப்பிட்ட சில வண்டிகளை சாலையில் இருந்து அகற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன. எங்கள் ஒரே கவலை என்னவென்றால், உணவு வண்டிகளில் விற்கப்படும் உணவு சுகாதாரமற்றதாக இருக்கக்கூடாது. சுகாதாரமற்ற உணவுகளை விற்றாலோ அல்லது சாலைப் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்தாலோ உணவு வண்டிகளை அகற்றுவது குறித்து உள்ளாட்சி அமைப்புகள் முடிவெடுக்கும்” என்று கூறினார்.
குஜராத்தின் பல்வேறு நகரங்களில் உள்ள அசைவ உணவு வண்டிகளை சாலைகளில் இருந்து அகற்ற வேண்டும் என்று உள்ளூர் பாஜக தலைவர்கள் கோரி வரும் நிலையில் முதலமைச்சரின் இந்த விளக்கம் வந்துள்ளது.
அகமதாபாத்தில் பாஜக ஆளும் முனிசிபல் கார்ப்பரேஷன், பொதுச் சாலைகளில் இருந்து அசைவ உணவுக் கடைகளையும், பள்ளிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் இருந்து 100 மீட்டர் தொலைவில் செயல்படும் அசைவ உணவுக்கடைகளையும் அகற்ற முடிவு செய்துள்ளது.
வதோதரா, ராஜ்கோட் மற்றும் துவாரகா போன்ற நகரங்களில் இருந்தும் அசைவ உணவு வண்டிகளை பொது இடங்களில் இருந்து அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.