பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் தாக்கத்தால் யாரும் உயிரிழந்ததாகத் தகவல்கள் இல்லை என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2016 ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி இரவு, ரூ.1000 மற்றும் ரூ.500 நோட்டுகள் மதிப்பிழப்பு செய்யப்படுவதாக அறிவித்தார். நாடு முழுவதும் இது பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு புதிய ரூ.2000, ரூ.500 நோட்டுகள் அறிமுகப் படுத்தப்பட்டன.
இந்நிலையில் நீரஜ் சர்மா என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், பிரதமர் அலுவலகத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்று கேட்டிருந்தார். முப்பது நாட்களுக்குள் அவருக்கு பதில் கிடைக்காததால் மத்திய தகவல் ஆணையத்திடம் மனு தாக்கல் செய்தார். அதில், 30 நாட்களுக்குள் தான் கேட்ட தகவலை அளிக்காத பிரதமர் அலுவலக அதிகாரிக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதையடுத்து மத்திய தகவல் ஆணையம் நடத்திய விசாரணையில் ஆஜராகிய, பிரதமர் அலுவலக மக்கள் தொடர்பு அதிகாரி, நீரஜ் சர்மா கேட்ட தகவலை அளிப்பதில் ஏற்பட்ட தாமதத்துக்கு மன்னிப்புக் கேட்டார். பின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் பாதிப்பால் யாரும் உயிரிழந்ததாக தகவல் இல்லை என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.