சுதந்திர தினத்தை முன்னிட்டு, டெல்லி செங்கோட்டையில் இருந்து இன்று காலை நாட்டு மக்களுடன் உரையாற்றிய பிரதமர் மோடி, “சமீபத்திய இயற்கை பேரழிவுகள் பலவும், நாடு முழுவதிலும் உள்ள பல குடும்பங்களுக்கும் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு பெரும் பிரச்னைகளை கொடுத்துள்ளது. தங்களின் குடும்பத்தினரை இழந்து தவிக்கும் அனைவருக்கும் எனது ஆறுதலை தெரிவித்து கொள்கிறேன்” என்றார்.
இமாச்சல பிரதேச முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு அம்மாநிலத்தில் ஏற்பட்ட இயற்கை பேரிடர் குறித்து கூறுகையில், “இதுவரை இந்த பேரிடரில் 55 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலி எண்ணிக்கை உயரலாம். போர்கால அடிப்படையில் பணிகள் நடைப்பெற்று வருகின்றன” என்றுள்ளார்.
நேற்றிரவுமட்டும் இமாச்சலின் சோலன் மாவட்டத்தில் மேக வெடிப்பு காரணமாக ஏற்பட்ட கனமழையில் 7 பேர் இறந்துள்ளனர். முன்னதாக சிம்லாவில் உள்ள சம்மர்ஹில் மலையில் உள்ள சிவன் கோயிவிலில் மேக வெடிப்பு காரணமாக ஏற்பட்ட கனமழையில் அக்கோயில் இடிந்து விழுந்தது. இதில் 9 பேர் உயிரிழந்தனர்.
மேலும் ஃபாக்ஸி பகுதியில் நிலக்சரிவில் ஏற்பட்ட இடர்பாடுகளில் சிக்கி அங்கிருந்து 5 உடல்கள் எடுக்கப்பட்டு 17 பேர் காயங்களுடன் மீட்கபட்டுள்ளர் என்று எஸ்.பி சஞ்சீவ் குமார் காந்தி PTI செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.
இப்படி இமாச்சலப் பிரதேசத்தில் ஏற்படும் அடுத்தடுத்த இயற்கை பேரிடர் மரணங்கள் காரணமாக இன்று சுதந்திர தினத்தையொட்டி அங்கே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் தடை செய்யப்பட்டுவிட்டது.
இமாச்சல பிரதேசத்திலும் உத்தரகாண்ட் மற்றும் வடகிழக்கு இந்தியாவிலும் அடுத்த 4 - 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- ஜெனிட்டா ரோஸ்லின்.S