வரும் 2021ஆம் ஆண்டு முதல் இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால் அரசுப் பணி கிடைக்காது என்று அசாம் மாநில அரசு முடிவு எடுத்துள்ளது.
மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் வகையின கொள்கையை நடைமுறைப்படுத்த அசாம் மாநில அரசு கடந்த 2017ம் ஆண்டு முடிவு செய்தது. இந்த மக்கள் தொகை கொள்கை மூலம் அசாம் மாநிலத்தில் அதிக குழந்தைகள் இல்லாமல் இருக்கும் சிறிய குடும்பத்திற்கு ஊக்கம் அளிக்கப்பட்டு வந்தது. இந்தச் சூழலில் ‘மக்கள் தொகை’ தொடர்பாக அம்மாநில அமைச்சரவை ஒரு புதிய முடிவு ஒன்றினை எடுத்துள்ளது. நேற்று மாலை அசாம் மாநில அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மக்கள் தொகை தொடர்பாக ஒரு புதிய உத்தரவை அமல்படுத்த முடிவு எடுக்கப்பட்டது.
அதன்படி வரும் 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் தேதி முதல், இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருப்பவர்கள் அரசுப் பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் இல்லை. அதேபோல தற்போது பணியில் இருக்கும் அரசு அதிகாரிகளும் இந்த இரண்டு குழந்தைகள் விதியை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அதாவது, இரண்டு குழந்தைகள் இருப்பவர்கள் மூன்றாவது குழந்தையை இனிமேல் பெற்றுக் கொள்ளக் கூடாது என்பதுதான்.
இந்த முடிவு குறித்து அம்மாநில அமைச்சர் ஒருவர், “அசாம் மாநிலத்தில் தற்போது நிலத்தின் மீது இருக்கும் அதிக நெருக்கடியை சமாளிக்க நாங்கள் மக்கள் தொகை கட்டுபாட்டு கொள்கையை தீவிரமாக அமல்படுத்த உள்ளோம். அத்துடன் தற்போது நிலங்கள் இல்லாத குடும்பங்களுக்கும் நாங்கள் நிலம் அளிக்க திட்டமிட்டுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.