ஊரடங்கு காரணமாகச் சொந்த ஊர் திரும்பிய 100 வெளிமாநிலத்தவர்கள் லாரியின் பின் பக்கத்தில் நின்று கொண்டு 800 கிமீ பயணித்துள்ளனர்.
ஊரடங்கு உத்தரவு காரணமாக நாடு முழுவதும் அத்தியாவசிய தேவைகளைப் பிற அனைத்து சேவைகளும் முடக்கப்பட்டுள்ளன. இதனால் வெளிமாநிலங்களுக்குப் பணி நிமித்தமாகச் சென்ற பணியாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து அவர்களில் பெரும்பாலானோர் அவரவர் சொந்த மாநிலங்களுக்கு நடைப்பயணமாகவே சென்றனர். இதற்கு சமூக ஆர்வலர்கள், பொது மக்கள் தரப்பிலிருந்து கடுமையான கண்டனங்கள் எழுந்தன.
இதனிடையே அவர்களைச் சொந்த மாநிலங்களில் அனுப்புவதற்கான முயற்சிகளை மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. ஆனால் இதில் பெரும்பான்மையானோருக்கு அரசின் உதவி கிடைக்கவில்லை எனக்கூறப்பட்டது. இந்நிலையில் அரசின் உதவி கிடைக்கப் பெறாதவர்கள் பலர் அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு நடைப்பயணமாகவும், மிதிவண்டி மூலமாகவும், வண்டிகள் மூலமாகவும் சென்று வருகின்றனர். அந்த வகையில் சத்தீஸ்கரைச் சேர்ந்த 100 நபர்கள் தெலுங்கானாவிலிருந்து டிப்பர் லாரியில் மூலம் சத்தீஸ்கருக்குச் சென்றுள்ளனர்.
இது குறித்து அதில் பயணித்த பயணிகள் கூறும் போது “ நாங்கள் நான்கு நாட்களாக இந்த லாரியில் பயணித்து வருகிறோம். இங்கு இரண்டு மணி நேரமாகக் காத்துக்கொண்டிருக்கிறோம். எங்களுக்கு உணவோ, தண்ணீரோ எதுவும் கிடைக்கவில்லை. பெரும்பாலும் இது போன்ற லாரிகளில் பின்பகுதியில் வெயில் படாமல் இருக்க பிளாஸ்டிக் தார்ப்பாயைப் போர்த்தி இருப்பார்கள். ஆனால் அது கூட எங்களுக்குக் கிடைக்கவில்லை. எங்களது குழந்தைகளைச் சேலையின் மூலம் மூடியே பயணிக்கிறோம். சத்தீஸ்கர் அரசு எங்களுக்கு எந்த உதவியும் செய்ய வில்லை. அரசு எங்களுக்கு உதவ வேண்டும்”என்று கூறினார்