விவசாயிகள் தற்கொலைக் குறித்து நாடாளுமன்றத்தில் காரசார விவாதம்

விவசாயிகள் தற்கொலைக் குறித்து நாடாளுமன்றத்தில் காரசார விவாதம்
விவசாயிகள் தற்கொலைக் குறித்து நாடாளுமன்றத்தில் காரசார விவாதம்
Published on

கடந்த 3 ஆண்டுகளில் விவசாய தற்கொலை குறித்த எந்தவொரு அறிக்கையும் தேசியக் குற்றவியல் ஆவணக் காப்பகம் வெளியிடவில்லை என மத்திய அமைச்சர் நாடாளுமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் பேசிய திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தினேஷ் திரிவேதி, கடந்த சில ஆண்டுகளில் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் குடும்பத்திற்கு மறுவாழ்வு ஏற்படுத்தி தர அரசிடம் ஏதேனும் திட்டம் உள்ளதா எனக் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த மத்திய வேளாண்துறை அமைச்சர் ராதா மோகன் சிங்,  கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் விவசாயிகள் தற்கொலைக் குறித்த எந்தவொரு அறிக்கையும் தேசியக் குற்றவியல் ஆவணக் காப்பகம் வெளியிடவில்லை எனத் தெரிவித்தார்.

அதேசமயம் கடந்த மார்ச் மாதம் விவசாயிகள் தற்கொலைக் குறித்து வேளாண்துறை அமைச்சகம் சார்பில் நாடாளுமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதில் 2015-ஆம் ஆண்டு 12,602 விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் தற்கொலை செய்துகொண்ட நிலையில், 2016-ஆம் ஆண்டு அந்த எண்ணிக்கை 11,300 ஆக குறைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மத்திய வேளாண்துறை அமைச்சர் கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் விவசாயிகள் தற்கொலை குறித்த எந்தவொரு அறிக்கையும் தேசியக் குற்றவியல் ஆவணக் காப்பகம் வெளியிடவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

“மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசியக் குற்றவியல் ஆவணக் காப்பம் தற்கொலை குறித்த விவரங்களை வெளியிடுகின்றன. இதன் இணையத்தில் 2015-ஆம் ஆண்டு வரை தற்கொலை குறித்த விவரங்கள் உள்ளன. ஆனால் அதன்பின் விவரங்கள் ஏதும் இன்னும் வெளியிடப்படவில்லை” என எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார் மத்திய வேளாண்துறை அமைச்சர் ராதாமோகன் சிங்

அதேநேரத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து மத்திய அரசு விவசாய தற்கொலைகளை மறைப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. இதுகுறித்து பேசிய தினேஷ் திரிவேதி, “பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் எப்படி இழப்பீடு வழங்கும்” எனக் கூறினார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அகமது தனது ட்விட்டர் பக்கத்தில், “விவசாயிகள் தற்கொலை குறித்து அரசு அறியாமல் இருக்கிறதா..? அல்லது தரவுகளை வெளியிடாமல் நிறுத்தி வைத்திருக்கிறதா..? உண்மையை தெரிந்துக் கொள்ள முடியுமா..?” எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com