ரூபே மற்றும் யூபிஐ மூலம் பரிவர்த்தனைகளை மேற்கொண்டால் எம்டிஆர் கட்டணம் இனி வசூலிக்கப்படாது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற பொதுத்துறை வங்கிகளின் முதன்மை நிர்வாக அதிகாரிகளின் கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். கூட்டத்துக்குப் பின் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையிலான அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.
அதன்படி ரூபே, பீம் யூபிஐ, ஆதார் பே, நெஃப்ட், ஆர்டிஜிஎஸ் மூலம் பணப் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளும் வியாபாரிகளிடம் இதுவரை வசூலிக்கப்பட்டு வந்த எம்டிஆர் கட்டணம் இனி வசூலிக்கப்படமாட்டாது என்றார். 50 கோடி ரூபாய்க்கு மேல் ஆண்டு வருவாய் ஈட்டும் தொழில் நிறுவனங்கள் குறைந்த தொகைக்கான டிஜிட்டல் பரிவர்த்தனை சேவைகளை தங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் என்றும், அப்படி வழங்கும் தொழில் நிறுவனங்களிடம் இருந்தும், வாடிக்கையாளர்களிடம் இருந்தும் எம்டிஆர் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என்றும் தெரிவித்தார்.
இந்தப் புதிய உத்தரவு புத்தாண்டு முதல், அதாவது வரும் ஜனவரி ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் கூறினார். இதேபோல், ரூபே டெபிட் கார்டுகள் மற்றும் யூபிஐ பணப் பரிவர்த்தனைகளை மக்களிடம் கொண்டு செல்வதற்கான பரப்புரையில் அனைத்து வங்கிகளும் ஈடுபட வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
மேலும், வங்கி முறைகேடுகள் தொடர்பாக, சிபிஐ நேரடியாக விசாரணை நடத்தாது என்றும், முறைகேடுகள் தொடர்பாக வங்கிகளே ஒரு குழு அமைத்து தவறான நடவடிக்கையில் ஈடுபடும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நிர்மலா சீதாராமன் கூறினார்.