வினாத்தாள் குளறுபடி பிரச்னையில் தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு இந்தாண்டு எந்தச் சலுகையும் வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
நீட் தேர்வு வினாத்தாள் தமிழ் மொழிபெயர்ப்பில் குளறுபடி ஏற்பட்டதைத் தொடர்ந்து, 49 வினாக்களுக்கு, 196 மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சிபிஎஸ்இ தொடர்ந்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.ஏ, பாப்டே மற்றும் நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
சிபிஎஸ்இ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மருத்துவ படிப்புகள் ஆங்கில மொழியில் உள்ள நிலையில், ஆங்கிலம் தெரியவில்லை என்றால் மாணவர்கள் எப்படி மருத்துவம் படிப்பார்கள் எனக் கேள்வி எழுப்பினார். மருத்துவப் படிப்புகள் ஆங்கில மொழியில் உள்ள நிலையில், நீட் தேர்வை மட்டும் பிற மாநில மொழிகளில் நடத்துவது ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு விளக்கமளித்த சிபிஎஸ்இ தரப்பு வழக்கறிஞர், அடிப்படை ஆங்கிலம் தெரிந்திருந்தாலேயே நீட் தேர்வு வினாக்களை புரிந்து கொள்ள முடியும் எனத் தெரிவித்தனர். சிபிஎஸ்இ தரப்பு வாதத்தைக் கேட்ட நீதிபதிகள், வினாத்தாள் குளறுபடி பிரச்னையில் தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு இந்தாண்டு எந்தச் சலுகையும் வழங்க முடியாது எனத் திட்டவட்டமாக தெரிவித்தனர். மேலும் வழக்கு விசாரணையை செப்டம்பர் 26ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.