கர்நாடக மாநிலத்தில் புதுமண ஜோடி ஒன்று ஜேசிபியில் உட்கார்ந்து சவாரி செய்த நிகழ்ச்சி பெருத்த ஆச்சர்யத்தை கிளப்பியுள்ளது.
வடிவேலுவின் பாணியில் சொன்னால் ‘புதுசு புதுசா ஐடியாவை கண்டுப்பிடிக்குறாங்கய்யா?’ என்றுதான் குறிப்பிடத் தோன்றுகிறது. கர்நாடக மாநிலம் புட்டுர் தாலுக்காவிலுள்ள பர்புஞ்சாவில் நடைபெற்ற திருமணம் ஒன்று மிக விநோதமாக அரங்கேறியுள்ளது.
வழக்கமாக திருமணம் முடிந்து மாப்பிள்ளையும் பெண்ணும் குதிரையில் சவாரி வருவதை பார்த்திருப்போம். அப்படி இல்லை என்றால் சொகுசு காரில் வலம் வருதை பார்த்திருப்போம். அதுவும் இல்லையா நாதசுரம், மேளம் முழங்க பொடிநடையாக நடந்து வருவதையாவது பார்த்திருப்போம். ஆனால் சேதன் கல்லகட்டா-மமதா என்ற இளம் தம்பதியர் தங்களின் திருமணத்தை முடித்துக் கொண்டு ஜேசிபி வாகனத்தில் உட்கார்ந்து கொண்டு வலம் வந்ததை ஊர்மக்கள் முழுக்க அதிசயமாக வாயை பிளந்துக் கொண்டு பார்த்து ரசித்துள்ளனர். அந்தளவுக்கு ஜேசிபி மீது இந்த ஜோடிக்கு என்னதான் காதல் என விசாரித்தால் விவரம் விறுவிறுப்பாக இருந்தது.
திருமணத்தை முடித்த கையோடு மாப்பிள்ளையின் நண்பர்கள் மொய் வைத்துவிட்டு வீட்டுக்கு கிளம்பிவிடுவார்கள் என பார்த்த மமதாவுக்கு செம சர்ப்ரைசை கணவரின் நண்பர்கள் கொடுக்க இருக்கிறார்கள் எனபது முன்பே புரியவில்லை. ‘வழக்கமாக பொண்ணும் மாப்பிள்ளையும் குதிரை வண்டி சவாரிதான் செய்வார்கள்? நீ ஏன் மனைவியை அழைத்து கொண்டு ஜேசிபியில் சவாரி செய்யக்கூடாது’ என்று கூறியிருக்கிறார்கள். ஐடியா புதுசா இருக்கே என நினைத்த புது மாப்பிள்ளை சேதன், ‘பண்ணலாமே? உடனே வண்டியை வர வையுங்கள்’ என பச்சைக் கொடி காட்டி இருக்கிறார். சொன்னதை போலவே ஜேசிபியை வர வைத்தனர். ஜேசிபி முன்னால் கைபோல அள்ள இருக்கும் பகுதிக்குள் உட்கார்ந்து உலா வர ஆரம்பித்துள்ளனர்.
இது குறித்து நியூஸ்மினிட் வெப்சைட்டிற்கு பேட்டியளித்த சேதன், “முதலில் நண்பர்கள் சொன்னதும் லேசாக தயக்கம் இருந்தது. என் மனைவியும் உட்கார பயந்தார். உட்கார மறுத்தார். ஆனால் நான் அவரிடம் ‘தினமும் ஜேசிபியோடுதான் வேலை செய்கிறேன். அதனால் எதற்கு பயப்பட வேண்டாம்’ என்று சொன்னேன். உடனே அவருக்கு தன்னம்பிக்கை வந்துவிட்டது. என்னுடன் அமர்ந்து தைரியமாக பயணித்தார்” என்கிறார்.
மேலும் ஏன் கார், குதிரையை நீங்கள் தேர்வு செய்யவில்லை என்றதற்கு, “தினமும் நான் உட்கார்ந்து பயணிக்கும் வாகனம் அது” என்று கூலாக பதில் கொடுத்துள்ளார் இந்தப் புதுமாப்பிள்ளை.