தேர்தல்பத்திர நன்கொடை: ரெய்டுக்குப்பின் ஓராண்டில் கோடிகளை அள்ளி வழங்கிய மாட்டிறைச்சி நிறுவனங்கள்!

நாட்டில் மாட்டிறைச்சி ஏற்றுமதி வர்த்தகத்தில் முன்னணியில் இருக்கும் நிறுவனம் ஒன்று, 2019ஆம் ஆண்டில் மட்டும் தேர்தல் பத்திரம் மூலமாக ரூ.6 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளது.
அலானா
அலானாட்விட்டர்
Published on

தேர்தல் பத்திரங்கள் மூலம் பெறப்பட்ட நன்கொடை விவரம்

நிறுவனங்கள் வாங்கிய தேர்தல் பத்திரங்கள், அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்ற நன்கொடைகள் விவரங்களை பாரத ஸ்டேட் வங்கி தேர்தல் ஆணையத்திற்கு, கடந்த மார்ச் 13ஆம் அளித்தது. இதைத் தொடர்ந்து அந்த விவரங்களை தேர்தல் ஆணையம் மார்ச் 14ஆம் தேதி, தன்னுடைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்தது. அதன்படி ஏர்டெல்லை நடத்தும் பார்தி குழுமம், முத்தூட் பைனான்ஸ், மகிந்திரா அண்டு மகிந்திரா, பஜாஜ் பைனான்ஸ், பஜாஜ் ஆட்டோ, எம்ஆர்எஃப், சியட், வேதாந்தா, ஐடிசி, டாக்டர் ரெட்டீஸ் லேப் என பல பிரபல நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது தெரியவந்துள்ளது.

இதில் கோயம்புத்தூரைச் சேர்ந்த லாட்டரி தொழிலதிபர் மார்ட்டின் குழுமத்திற்கு சொந்தமான நிறுவனமான பியூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீஸ் நிறுவனம் அதிகபட்சமாக 1,368 கோடி ரூபாய் மதிப்புக்கு பத்திரங்களை வாங்கியுள்ளது தெரியவந்துள்ளது. இதில், 2019, ஏப்ரல் 12 முதல் 2024, ஜனவரி 24 வரை தேர்தல் பத்திரங்களை வாங்கிய முதல் 30 நிறுவனங்களில் குறைந்தது 14 நிறுவனங்கள் மத்திய அல்லது மாநில விசாரணை அமைப்புகளால் நடவடிக்கையை எதிர்கொண்டதாக தரவுகள் தெரிவித்துள்ளன.

மீண்டும் எஸ்பிஐக்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம்

இதற்கிடையே, எஸ்பிஐ வழங்கிய தகவல்களில் தேர்தல் பத்திரங்களை வாங்கிய நிறுவனங்களின் பெயரைத் தவிர, பத்திரங்களின் வரிசை எண் இல்லை. இதனால், எந்தெந்த கட்சிக்கு யார் எவ்வளவு நன்கொடை அளித்தார்கள் என்கிற விவரத்தை அறிந்துகொள்ள முடியவில்லை. இது மேலும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து மீண்டும் உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், ’தேர்தல் பத்திரத்தின் எண்கள்தான் நன்கொடை பெறுபவரையும், அதனை வாங்குபவரையும் இணைக்கும் ஒன்று. அப்படி இருக்க, தேர்தல் பத்திரங்களின் பிரத்யேக எண்ணை ஏன் வங்கி குறிப்பிடவில்லை? முழு விவரத்தினை எஸ்பிஐ வங்கி தெரிவிக்க வேண்டும். மேலும், இந்த விவரங்களை ஏன் வெளியிடவில்லை என்பதையும் எஸ்பிஐ வங்கி திங்கட்கிழமைக்குள் விளக்கமாக அளிக்க வேண்டும்’ எனத் தெரிவித்தது. அதற்கு எஸ்பிஐ தரப்பில், ‘நிறுவனங்கள் வாங்கிய பத்திர வரிசை எண்களை அரசியல் கட்சிகள் வங்கியில் செலுத்திய பத்திரங்களோடு பொருத்தும் பணியை முடிக்க நீண்ட காலம் எடுக்கும்’ என தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

ரூ.6 கோடி நன்கொடை வழங்கிய மாட்டிறைச்சி நிறுவனங்கள்!

இந்த நிலையில், தேர்தல் பத்திரங்களை வாங்கிய நிறுவனங்களில் இரண்டு மாட்டிறைச்சி ஏற்றுமதி நிறுவனங்களும் உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அவை, Allanasons Private Limited மற்றும் Frigorifico Allana Private Limited என தெரிய வந்துள்ளது. இந்த இரண்டு நிறுவனங்களும் Allana குழும நிறுவனத்துக்குச் சொந்தமானவை எனக் கூறப்படுகின்றன. இதில் Allanasons நிறுவனம் கடந்த 2019, ஜூலை 9ஆம் தேதி ரூ.2 கோடி நன்கொடையையும் அதன்பின்னர் அதே ஆண்டில் அக்டோபர் 9ஆம் தேதி அன்று, ரூ.1 கோடியையும் நன்கொடையாக வழங்கி இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

அதுபோல், Frigorifico நிறுவனம் 2019, ஜூலை 9ஆம் தேதி ரூ.2 கோடி நன்கொடையை வழங்கியுள்ளது. இது தவிர, Allana Cold Storage என்ற நிறுவனமும் அதே ஆண்டு, ஜூலை 9ஆம் தேதி ரூ.1 கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளது. மேற்கண்ட நிறுவனங்கள் அனைத்தும் வெவ்வேறு இயக்குநர்களால் வழிநடத்தப்படுகின்றன. ஆக, அந்த ஆண்டு மட்டும் இந்த நிறுவனங்கள் நன்கொடையாக வழங்கிய தொகை மொத்தம் ரூ.6 கோடி ஆகிறது.

நன்கொடை வழங்குவதற்கு முன்பாக ரெய்டு நடத்திய வருமானவரித்துறை

முன்னதாக, இந்த நிறுவனங்களில் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வருமானவரித் துறை சோதனை நடத்தியது. அப்போது ரூ.2,000 கோடி மதிப்புள்ள வரியை அந்த நிறுவனங்கள் ஏய்ப்பு செய்திருந்ததாக விசாரணை அதிகாரிகள் குற்றஞ்சாட்டியிருந்தனர். அதற்குப் பின்னர் 2 மாதங்கள் கழித்து, மேற்கண்ட ரூ.6 கோடி ரூபாய் தொகையை நன்கொடையாக வழங்கியிருக்கிறது கவனிக்கத்தக்கது. அதன்பிற்கு, 2019 ஆகஸ்ட் மாதம், Allanasons குழுமம், மகாராஷ்டிரா வெள்ளத்திற்கு முதல்வர் நிவாரண நிதியின்கீழ் ரூ.50 லட்சத்தை வழங்கியுள்ளது.

யார் இந்த Allanasons குழுமம்? அதன் ஆண்டு வருமானம்  எவ்வளவு?

1865ஆம் ஆண்டு நிறுவப்பட்ட Allanasons குழுமம், நாட்டின் மாட்டிறைச்சி ஏற்றுமதியாளர் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. தென்கிழக்கு ஆசியா, மத்திய கிழக்கு, CIS, ஆப்பிரிக்கா மற்றும் பசிபிக் பேசின் உள்ளிட்ட 85க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அந்த நிறுவனத்தின் ஆண்டு வருமானம் ரூ.500 - ரூ.1,000 கோடி அளவுக்கு இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. ஷார்ஜாவை தளமாகக் கொண்ட ஷிராஸ் ஏஆர் அல்லானா, விளம்பரதாரராக பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது. அல்லனா குழு முழுவதும் அப்துல்லா அல்லானாவின்கீழ் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்குமுன்பு இந்த நிறுவனங்கள், 2015 டிசம்பரில், அதாவது கடந்த 2014 பொதுத்தேர்தலுக்கு முன்னதாக, பாஜகவுக்கு ரூ.2.50 கோடி நன்கொடையை அளித்ததாக, தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் (2013-14 மற்றும் 2014-15) தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவில் கணிசமாக உயர்ந்த மாட்டிறைச்சி ஏற்றுமதி

இந்தியாவில் கடந்த பத்தாண்டுகளில் மாட்டிறைச்சி ஏற்றுமதி கணிசமாக அதிகரித்துள்ளது. 2016ஆம் ஆண்டுத் தரவின் படி இந்தியாவும், பிரேசிலும் கிட்டத்தட்ட ஒரே அளவு மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்துள்ளன. உலக மாட்டிறைச்சி சந்தையுடன் ஒப்பிடுகையில் பிரேசிலிடம் 20 சதவீதம் சந்தையும், இந்தியாவிடம் 20 சதவீதம் சந்தையும் உள்ளது. இதைத் தவிர ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளும் உலகளவில் மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்கின்றன. உலகில் பிரேசிலுக்கு அடுத்தபடியாக மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆய்வுகள்படி, கடந்த 2023ஆம் ஆண்டில் இந்தியாவிலிருந்து சுமார் 1.42 மில்லியன் மெட்ரிக் டன் கார்காஸ் வெயிட் ஈக்வலன்ட் (CWE) மாட்டிறைச்சி மற்றும் வியல் ஏற்றுமதி செய்யப்பட்டிருப்பதாகவும், இது, நடப்பு ஆண்டில் (2024)1.46 மில்லியன் மெட்ரிக் டன்களாக இருக்கும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com