INDIA கூட்டணி தற்போது முன்னேற்றம் அடையவில்லை என தெரிவித்துள்ள பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், காங்கிரஸ் கட்சியை குற்றஞ்சாட்டியுள்ளார்.
INDIA கூட்டணியின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்தாமல், 5 மாநில தேர்தல்களில் காங்கிரஸ் கவனம் செலுத்தி வருவதாக பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் விமர்சித்துள்ளார்.
INDIA கூட்டணியை ஒருங்கிணைத்ததில் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் முக்கிய பங்கு வகித்தார். அத்துடன் INDIA கூட்டணியின் முதல் ஆலோசனைக் கூட்டத்தை தனது இல்லத்தில் நடத்தி பாஜகவுக்கு எதிரான கூட்டணியை செயல்படுத்தியதிலும் நிதிஷ்குமார் பங்கு அளப்பரியது.
இந்நிலையில், பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் மாநாட்டில் பங்கேற்று பேசிய நிதிஷ்குமார், “மத்திய பாஜக அரசை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்ட நிலையில் தற்போது அந்த கூட்டணியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படவில்லை.
அடுத்தாண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்க்கும் அளவில் அமைக்கப்பட்ட INDIA கூட்டணியின் செயல்பாட்டின் மீது காங்கிரஸூக்கு அக்கறை இல்லை. ஐந்து மாநில தேர்தலில் மட்டுமே காங்கிரஸ் கவனம் செலுத்தி வருகிறது. ஐந்து மாநில தேர்தல்களுக்கு பிறகு அவர்களே அழைப்பார்கள்” என குறிப்பிட்டுள்ளார். நிதிஷ்குமாரின் இந்த பேச்சு INDIA கூட்டணியில் விவாதத்தை எழுப்பியுள்ளது.