பதவி விலகிய சிலமணி நேரத்தில் மீண்டும் ஆட்சியமைக்க உரிமை கோரும் பீகார் முதல்வர்!

பதவி விலகிய சிலமணி நேரத்தில் மீண்டும் ஆட்சியமைக்க உரிமை கோரும் பீகார் முதல்வர்!
பதவி விலகிய சிலமணி நேரத்தில் மீண்டும் ஆட்சியமைக்க உரிமை கோரும் பீகார் முதல்வர்!
Published on

பதவி விலகல் கடிதம் அளித்த சிலமணிநேரத்தில், மீண்டும் ஆட்சிஅமைக்க உரிமை கோரினார் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார். பீகார் அரசியலில் கூட்டணிகள் இடம்மாறிய பரபரப்பு தருணங்கள் நிகழ்ந்து வருகின்றன.

கடந்த இரண்டு ஆண்டுகளாக பீகாரில் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணி ஆட்சி நடந்துவந்தநிலையில், இரு கட்சிகளுக்கும் கருத்து வேறுபாடு முற்றிவந்தது. அண்மையில் பிரதமர் தலைமையில் நடந்த கூட்டம் உட்பட 5 முக்கிய கூட்டங்களை நிதிஷ்குமார் புறக்கணித்திருந்தார். மோதல் வெளிப்படையான நிலையில், முதலமைச்சர் நிதிஷ் குமார், ஆளுநர் பகு சவுகானை சந்தித்து தனது பதவி விலகல் கடிதத்தை அளித்தார்.

தொடர்ந்து பீகாரின் முன்னாள் முதலமைச்சர் ராப்ரி தேவி இல்லத்துக்குச்சென்று, ராஷ்ட்ரிய ஜனதா தளத்தலைவர் தேஜஸ்வி யாதவுடன் ஆலோசனை நடத்தினார். மகா கூட்டணியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து தேஜஸ்வி யாதவுடன் இணைந்து மீண்டும் ஆளுநர் மாளிகை சென்ற நிதிஷ்குமார், மீண்டும் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். 243 உறுப்பினர் இடம் கொண்ட பீகார் சட்டமன்றத்தில், 121 உறுப்பினர் ஆதரவு இருந்தால் ஆட்சி அமைக்கலாம் என்ற நிலையில், 160 உறுப்பினர் ஆதரவு கடிதங்களுடன் ஆளுநரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளார்.

2017 ஆம் ஆண்டு மஹாகத்பந்தன் ((`Mahagathbandhan'))கூட்டணியில் இருந்து விலகி பாரதிய ஜனதாவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இணைந்து ஆட்சி அமைத்தார் நிதிஷ்குமார். இதற்கு நேர்மாறாக, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைமையிலான மஹாகத்பந்தன் கூட்டணியில் இணைந்து ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளார் நிதிஷ் குமார்.

கடந்த 9 ஆண்டுகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து நிதிஷ்குமார் விலகுவது இது இரண்டாவது முறை. முன்னதாக தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக நரேந்திரமோடி அறிவிக்கப்பட்டபோது 2013ல் அக்கூட்டணியில் இருந்து நிதிஷ் விலகியிருந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com