பெட்ரோல், டீசல் வாகனங்களை தடை செய்யும் எந்த திட்டமும் அரசிடம் இல்லை என மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
பேட்டரி வாகனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான ஜிஎஸ்டியும் குறைக்கப்பட்டது. இதன் எதிரொலியாக எரிபொருள் மூலம் இயங்கும் பழைய வாகனங்கள் தடை செய்யப்படுமா என வாகன தயாரிப்பாளர்கள் கவலை தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் டெல்லியில் நடந்த ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்களுக்கான மாநாட்டில் பேசிய நிதின் கட்கரி, எரிபொருளில் ஓடும் வாகனங்களை தடை செய்யும் எண்ணம் இல்லை எனத் தெரிவித்தார். அந்த துறையை மீண்டும் எழுச்சிப் பெறச் செய்ய மத்திய அரசு முழு ஆதரவு அளித்து வருவதாகவும், குறிப்பாக வாகனத் துறையில் விதிக்கப்பட்டிருக்கும் ஜிஎஸ்டியை குறைப்பது தொடர்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் பேசியிருப்பதாகவும் நிதின் கட்கரி தெரிவித்தார்.