பழைய வாகனங்களை கொடுத்து புதிய வாகனங்களை வாங்க முன்வரும் வாடிக்கையாளர்களுக்கு சில சலுகைகளை மத்திய அரசு அறிவித்து வருகிறது.
20 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் இருக்கும் தனிநபர்களுக்கான வாகனங்களையும், 15 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் இருக்கும் வர்த்தக ரீதியிலான வாகனங்களையும் பயன்பாட்டில் இருந்து நீக்க மத்திய அரசு முடிவெடுத்திருக்கிறது. அதன் ஒரு பகுதியாக, பழைய வாகனங்களை கொடுத்து புதிய வாகனங்களை வாங்க முன்வரும் வாடிக்கையாளர்களுக்கு, மோட்டார் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் 5 சதவீதம் தள்ளுபடி வழங்கும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் குறு,சிறு, நடுத்தர நிறுவன துறையின் அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், ‘’மாசுக் கட்டுப்பாடு மற்றும் தகுதி சான்றிதழ் பெறும் நடைமுறை தானாக நடக்கும் வகையில் புதிய வாகன கொள்கையில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்காக, நாடு முழுவதும் தகுதி சான்றிதழ் வங்கும் மையங்களை அமைக்கும் பணிகளில் அரசு ஈடுபட்டுள்ளது. இந்த மையங்கள் அனைத்தும் அரசு தனியார் பங்களிப்பு (பிபிபி) முறையில் உருவாக்கப்படும். தானியங்கி சோதனைகளில் தேர்ச்சி பெறத் தவறும் வாகனங்களுக்கு அதிக அபராதம் விதிக்கப்படுவதுடன் அவற்றை பறிமுதல் செய்யவும் புதிய வாகன கொள்கையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது'' என்றார்.