மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள ஐஐஎம் நாக்பூரில் சாலை பாதுகாப்பு தொடர்பான கருத்தரங்கில் மத்திய அமைச்சர் கட்கரி கலந்து கொண்டார். கருத்தரங்கில், விபத்துகளை குறைக்க கார்களில் 6 ஏர் பேக்களை இணைப்பது, சாலைகளில் கரும்புள்ளிகளை குறைப்பது, மோட்டார் வாகன சட்டத்தின்படி அபராதங்களை அதிகரிப்பது ஆகியவற்றைப் பற்றி பேசினார்.
அதில் பேசிய அவர், “இந்தியாவில் தானியங்கி கார்கள் பயன்பாட்டை தான் ஒரு போதும் அனுமதிக்கப்போவதில்லை. தானியங்கி கார்களால் கிட்டத்தட்ட 80 லட்சம் ஓட்டுநர்கள் வேலை இழப்பார்கள். அது வேறொரு பிரச்சனையாகும். அத்தகைய கார்கள் குறைவான மக்கள் தொகை கொண்ட நாடுகளுக்கே சரியானதாக இருக்கும். அதன் காரணமாகவே அவ்வகை கார்கள் பயன்பாட்டை எதிர்க்கிறோம்” என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே மத்திய அரசுக்கும் டெஸ்லா நிறுவனத்திற்கும் இடையே நடக்கும் பேச்சுவார்த்தைகளையும் குறிப்பிட்டு பேசினார். அதுகுறித்து பேசிய அவர், “டெஸ்லா நிறுவனத்தை இந்தியாவிற்கு வரவேற்கிறோம். ஆனால் அது இங்கு கார்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்பது அரசின் பிரதான நிபந்தனை. டெஸ்லா நிறுவனம் கார்களை சீனாவில் உற்பத்தி செய்து அவற்றை இந்தியாவில் விற்பதை ஏற்க இயலாது” என்று தெரிவித்தார்.
அமெரிக்காவிலும் மத்திய கிழக்கு நாடுகளிலும் ஓட்டுநர் இல்லாத கார்கள் வேகமாக பிரபலமாகி வரும் நிலையில் இந்தியாவில் அதை அனுமதிக்கப்போவதில்லை என அமைச்சர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.