பலத்த பாதுகாப்பையும் மீறி பிகார் முதல்வர் நிதிஷ் குமாரை இளைஞர் ஒருவர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிகார் முதல்வர் நிதீஷ் குமார் தனது சொந்த மக்களவைத் தொகுதிகளாக இருந்த பார்ஹ் மற்றும் நாளந்தாவுக்கு உட்பட்ட பகுதிகளில் ஒரு வாரகாலத்துக்கும் மேலாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில், இன்று தனது சொந்த கிராமமான பக்தியார்பூருக்கு சென்ற நிதீஷ் குமார், அங்கிருக்கும் சுதந்திரப் போராட்ட வீரரான ஷீல்பத்ரா யாஜி சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதற்காக, கையில் மாலையுடன் சிலைக்கு அருகே நிதிஷ் குமார் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு போடப்பட்டிருந்த பலத்த போலீஸ் பாதுகாப்பை மீறி நிதிஷ் குமாரை நெருங்கிய நபர், அவரது முதுகில் பலமாக தாக்கினார். இதனால் அதிர்ச்சியடைந்து திரும்பி பார்த்த நிதிஷ் குமாரை மீண்டும் தாக்குவதற்காக அவர் கையை ஓங்கினார். அதற்குள்ளாக அங்கிருந்த போலீஸார், அந்த நபரை மடக்கிப் பிடித்து அந்தப் பகுதியில் இருந்து கொண்டு சென்றனர்.
முதல்கட்ட விசாரணையில், அவரது பெயர் சங்கர் வர்மா (33) என்பதும், அவர் சற்று மனநிலையை பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது. அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்படுவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். முதல்வர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பாதுகாப்பு குறைபாடு இருந்தது தொடர்பாகவும் துறையில் ரீதியில் விசாரணை நடத்தப்படுவதாக பிகார் டிஜிபி கூறியுள்ளார்.