மும்பை பந்த்ரா - குர்லா வணிக தளத்தில் உள்ள ஜியோ குளோபல் மையத்தில் இதற்கென 4 அடுக்குகள் கொண்ட கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இதில், 2000 இருக்கைகள் கொண்ட திரையரங்கம், நவீன ஸ்டுடியோ, கலை நிகழ்ச்சிகளுக்கான அரங்கம் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. மும்பையில் அமைந்துள்ள இந்த கட்டடத்தின் தொடக்க விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் நீட்டா அம்பானி, முகேஷ் அம்பானி, இஷா அம்பானி, ஆகாஷ் அம்பானி, ஷ்லோகா அம்பானி, ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சன்ட் என முழு அம்பானி குடும்பமும் பங்கேற்றது.
மேலும், நடிகர்கள் ரஜினிகாந்த், சல்மான் கான், அமீர்கான், ரன்வீர் சிங், நடிகைகள் தீபிகா படுகோன், ஆலியா பட், வித்யா பாலன், ஐஸ்வர்யா ராய் பச்சன், ஷ்ரத்தா கபூர், சித்தார்த் மல்ஹோத்ரா, கியாரா அத்வானி, கரீனா கபூர், பிரியங்கா சோப்ரா, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 'ஸ்பைடர்மேன்’ படத்தில் நடித்த ஹாலிவுட் நட்சத்திரங்களான ஜெண்டயா மற்றும் டாம் ஹாலண்ட் ஆகியோரும் கலந்துகொண்டனர். தொடக்க விழாவை முன்னிட்டு, இசை மற்றும் ஆடை அலங்கார கண்காட்சி மற்றும் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதில், ’ரகுபதி ராகவ் ராஜா ராம்’ பாடலுக்கு நீட்டா அம்பானி அழகாக நடனமாடி, பார்வையாளர்களைக் கவர்ந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியது குறிப்பிடத்தக்கது. இந்த கலாச்சார மையம் உருவாக்கம் குறித்து நீட்டா அம்பானி, “இது ஒரு புனித பயணம் போன்றது.
சினிமா, இசை, நடனம், நாடகம், இலக்கியம், கைவினைப் பொருட்கள், அறிவியல் மற்றும் ஆன்மீகம் ஆகியவை சார்ந்து இயங்க ஒரு இடமாகவும், கலை மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை மேம்படுத்துவதற்கும் கொண்டாடுவதற்கும் ஒரு இடமாகவும் இதனை உருவாக்க எங்களுக்கு ஆர்வம் ஏற்பட்டது. இது இந்தியாவின் சிறந்த விஷயங்களை உலகிற்குக் காண்பிக்கவும் உலகின் சிறந்தவற்றை இந்தியாவுக்கு வரவேற்பதற்கான ஒரு இடமாகவும் இருக்கும்” எனத் தெரிவித்தார்.
இந்த மையத்தில், இந்திய பாரம்பரியத்தின் அடையாளங்களான நடனம், நாடகம், இசை, கலை மற்றும் பலவற்றின் மூலம் இந்தியாவின் கலைகளை விவரிக்கும் விதமான நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. நாளை (ஏப்.3) மாலை ‘நாகரிகம் தேசம்’ என்ற இசை நிகழ்ச்சி, நடைபெற இருக்கிறது. இது தவிர, இந்திய உடைகளில் ஃபேஷன் ஷோ, இந்தியாவில் தாக்கம் செலுத்திய சமகால கலைஞர்களின் படைப்புகளைக் கொண்டாடும் சங்கமம் கலைக் கண்காட்சிகள் போன்றவையும் வரும் நாட்கள் முதல் நடைபெற இருக்கிறது.
கடந்த 2021ஆம் ஆண்டு, பெண்களுக்களுக்கென பிரத்யேகமாக ’ஹெர் சர்க்கிள்’ என்ற டிஜிட்டல் வலைதளத்தை நீட்டா அம்பானி தொடங்கிவைத்தார். அதன்மூலம் பெண்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டு வருகிறது. இந்த தளம், 31 கோடி பெண்களைச் சென்றடைந்திருப்பதாக நீட்டா அம்பானி சமீபத்தில் பெருமிதம் பொங்க தெரிவித்திருந்தார்.