மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள் அடங்கிய சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு குறித்த மிக உயர்ந்த முடிவெடுக்கும் அமைப்பான “ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்” ஜூன் 28 மற்றும் 29 தேதிகளில் நடைபெற்றது. பல பொருட்கள் மற்றும் சேவைகளின் மீதான சரக்கு மற்றும் சேவை வரி விகிதங்களில் மாற்றம் செய்ய ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.
இதையும் படிக்கலாமே: ஜிஎஸ்டி உயர்வு! விலை உயரப்போகும் பொருட்கள் எவை எவை? முழு விபரம் இதோ!
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் அது தொடர்பாக இந்த கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “ஆன்லைன் விளையாட்டுகளுக்கு கூடுதல் வரி விதிப்பது தொடர்பாக மறுபரிசீலனை செய்து அறிக்கை அளிக்க குழுவுக்கு அவகாசம் அளித்துள்ளோம்” என தெரிவித்தார்.
இது குறித்து பேசும் போது கேசினோக்கள், ஆன்லைன் கேமிங், குதிரைப் பந்தயம் ஆகியவை பற்றி வரிசையாக குறிப்பிட்டார் நிர்மலா சீதாராமன். அப்போது குதிரைப் பந்தயம் (Horse Racing) என்பதற்கு பதிலாக குதிரை பேரம் (அரசியலில்) என்று பொருள்படும் “Horse Trading” என்று தவறுதலாக குறிப்பிட்டார் நிர்மலா சீதாராமன். ஆனால் உடனடியாக தவறை உணர்ந்த அவர் தனது பிழையை திருத்தி Horse Racing என்று சரியாக கூறினார்.
இருப்பினும் நிதியமைச்சர் தவறுதலாக குதிரை பேரம் என்று குறிப்பிட்ட வீடியோவை பகிர்ந்து நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர். இந்த வீடியோ கிளிப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் சீதாராம் யெச்சூரி பகிர்ந்துள்ளார். அவர் இந்த வீடியோவைப் பயன்படுத்தி பாஜக மீது குதிரை பேரம் குற்றச்சாட்டு சுமத்தினார். “உண்மை வெளிவருகிறதா? குதிரை பேரத்திற்கும் ஜிஎஸ்டி! தயவுசெய்து மேலே செல்லுங்கள்” என்று பதிவிட்டுள்ளார் யெச்சூரி.