மிக்ஜாம் புயல் கனமழையால் கடந்த டிசம்பர் 4ஆம் தேதி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதற்கு நிவாரணத் தொகை வழங்குவதற்காக மத்திய அரசிடம் தமிழக அரசு ரூ.4 ஆயிரம் கோடி தொகை கேட்டு கோரியிருந்தது. இதையடுத்து தமிழ்நாட்டிற்கு வெள்ள நிவாரணம் வழங்க வேண்டிய மாநில பேரிடர் மீட்பில் இருந்து நிலுவைத் தொகையான ரூ.450 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியது. இதுபோக சென்னைப் புறநகர்ப் பகுதிகளில் வெள்ளநீர் கால்வாய்களை சீரமைக்க 550 கோடி ரூபாயை ஒதுக்கி உள்ளது. அதிகபட்சம் 12 ஆயிரம் கோடி ரூபாய்க்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு கூறிய நிலையில், குறைந்தபட்சம் 4 ஆயிரம் கோடி கேட்ட சூழலில், மத்திய அரசு வெறும் 450 கோடி ரூபாய் ஒதுக்கியிருந்தது விமர்சனத்தை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு பேட்டியளித்திருந்த தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “மத்திய அரசிடம் நாங்கள் கொடுத்த வரிப்பணத்தை தானே கேட்கிறோம்.. அவர்களிடம் நாங்கள் என்ன பிச்சையா கேட்கிறோம்? நான் என்ன அவங்க வீட்டு அப்பன் காசையா கேட்கிறோம். மக்கள் கொடுத்த வரி பணத்தை தானே கேட்கிறோம்” எனப் பதிலளித்து இருந்தார். இதற்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.
இதுகுறித்து தெலங்கானா மாநில ஆளுநரும் புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை செளந்தரராஜன், ”அவங்க தாத்தா, அப்பா பதவியை அனுபவிக்கிறார் உதயநிதி ஸ்டாலின் அப்படித்தான் பேசுவார். கலைஞர் உரிமைத்தொகைன்னு சொல்றீங்களே, அந்தப் பணத்தை என்ன உங்கள் வீட்டில் இருந்தா எடுத்துக்கொடுக்கிறீர்கள்? உதயநிதி முதலில் வார்த்தைகளை அடக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். அவர் வாயை அடக்கவில்லை என்றால், அவர் ஒரு எதிர்மறை தலைவராகத்தான் எல்லோராலும் பார்க்கப்படுவார். கலைஞரோட பேரன்தானே நீங்க. கலைஞர் இப்படித்தான் பேசுவாரா? திட்டுவதாக இருந்தாலும் அழகுத் தமிழில் பேசக்கூடிய தலைவர் கலைஞர். எனவே, இப்படிப் பேசுவதை உதயநிதி ஸ்டாலின் நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லையென்றால், மற்றவர்களும் அவரைப் பார்த்து அதேமாதிரி கேள்விகளைக் கேட்டுவிடுவார்கள்” என்றார்.
இதற்கு மீண்டும் பதிலளித்த அமைச்சர் உதயநிதி, “நான் மரியாதை கம்மியா யாரையும் பேசலை. அது என் நோக்கமும் இல்லை. நான் வேண்டுமானால் வேறு மாதிரி.. வேறு வார்த்தையில் சொல்லட்டுமா? மரியாதைக்குரிய மாண்புமிகு ஆளுநரின் அப்பாவுடைய காசை நாங்கள் கேட்கவில்லை. மாண்புமிகு ஒன்றிய அமைச்சரின் அப்பாவுடைய காசை யாரும் கேட்கவில்லை. தமிழ்நாடு மக்களின் வரிப்பணத்தைத்தான் கேட்கிறோம். தமிழ்நாடு மக்கள் பாதித்து உள்ளனர். அதனால் தமிழ்நாடு மக்கள் கட்டிய வரிப்பணத்தைத்தான் கேட்கிறோம்” எனத் தெரிவித்திருந்தார்.
இதையும் படிக்க; பெங்களூரு: இணையத்தில் வைரலாகும் To-Late விளம்பரம்... சுவாரஸ்யமான பின்னணி!
இந்தப் பேச்சு மீண்டும் மீண்டும் விஸ்வரூபமான நிலையில், இதுகுறித்து இன்று (டிச.22) டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்த அவருக்கு உரிய மரியாதையைக் கொடுக்கத்தானே செய்கிறோம். அரசியலில் முன்னுக்கு வரவேண்டும் என நினைக்கும் அவருக்கு நல்லதல்ல. வகிக்கும் பதவிக்கு ஏற்ற அளவுக்கு வார்த்தைகள் அளந்து வரவேண்டும். இதைப் பொதுவாகவே சொல்கிறேன். அவர் மீது எந்த காழ்ப்புணர்வுடனும் இதை கூறவில்லை” எனத் தெரிவித்தார்.
நிர்மலா சீதாராமனுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இன்று, தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”யாரிடம் எப்படி பேச வேண்டும் என்று தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் - கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எங்களுக்கு நன்றாகவே சொல்லிக் கொடுத்துள்ளார்கள். சிலரிடம் அண்ணாவைப் போல - சிலரிடம் கலைஞரைப் போல – சிலரிடம் கழகத்தலைவரைப் போல பேசுகிறோம். எனினும், குறிப்பிட்ட சிலரிடம் பெரியார் வழியில்தான் பேசியாக வேண்டியிருக்கிறது.
வெள்ளப் பாதிப்புக்காக கழக அரசு நிவாரண நிதி கேட்டால், "நாங்கள் என்ன ஏ.டி.எம்-ஆ" என ஒன்றிய அமைச்சர் ஒருவர் கூறியதாக செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, ‘அவர் அப்பா வீட்டுப் பணத்தை கேட்கவில்லை. தமிழ்நாட்டு மக்கள் அளித்த வரிப்பணத்தை தானே கேட்கிறோம்" என்று கூறினேன். என் பேச்சில் மரியாதை சற்று குறைவாக இருந்ததாக அப்போது சிலர் வருத்தப்பட்டார்கள். அடுத்த நாளே, மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் அவர்களுடைய அப்பா வீட்டு பணத்தை கேட்கவில்லை என்று அவர்கள் கோரியபடியே மிகுந்த ‘மரியாதையுடன்’ கேட்டுக்கொண்டேன். ஆனாலும், மாண்புமிகு ஒன்றிய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்கள் ‘பாஷை’ குறித்து இன்று பாடமெடுத்துள்ளார்கள்.
மீண்டும் சொல்கிறேன் மாண்புமிகு ஒன்றிய நிதியமைச்சர் திருமதி.நிர்மலா சீதாரமன் அவர்களின் ‘மரியாதைக்குரிய’ அப்பா வீட்டுப் பணத்தை நாம் கேட்கவில்லை. தமிழ்நாட்டு மக்கள் செலுத்திய வரிப்பணத்தில் இருந்து தமிழ்நாடு அரசு கோரிய பேரிடர் நிவாரண நிதியைத்தான் கேட்கிறோம். வழக்கமாக ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் மாநில பேரிடர் நிவாரண நிதியை தந்து விட்டு, ஏதோ ஒன்றிய அரசின் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தந்தது போல அடித்துப் பேச வேண்டாம். நாங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் ‘மரியாதை’ தருவதற்கு தயாராகவே இருக்கிறோம் – தமிழ்நாட்டு மக்கள் மீது கொஞ்சமாவது ‘அக்கறை’ வைத்து நிதியைத் தாருங்கள் மரியாதைக்குரிய மாண்புமிகு ஒன்றிய நிதி அமைச்சர் அவர்களே” எனப் பதிவிட்டுள்ளார்.