சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அதில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், நாகலாந்து ஆளுநர் இல.கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், “வெள்ளையர்களுக்கும், நம் மக்களுக்குமான ஆளுமை பரிமாற்றத்தை எடுத்துக்காட்டிய நிகழ்ச்சிதான் பிரதமருக்கும் திருவாவடுதுறை ஆதீனத்திற்கும் இடையில் நடைபெற உள்ள செங்கோல் பரிமாற்றம். இந்தியாவில் மட்டுமல்ல அனைத்து நாடுகளிலும் ஆளுமை பரிமாறுதல் பாரம்பரியப்படியே நடந்துள்ளது. வெள்ளையர்கள் கூட அவர்கள் நாட்டில் பழைய பாணியிலேயே ஆட்சி பரிமாறுதலை நடத்துகின்றனர். அந்த நாடும் ஜனநாயக நாடுதான்.
ராஜாஜி, தமிழகத்தில் இருந்த ஆதீனங்கள் பலருடன் ஆலோசித்து 'தர்ம தண்டம்' எனும் செங்கோலை திருவாவடுதுறை ஆதீனத்திடம் இருந்து பெற்றார்.செங்கோலை உருவாக்கிய உம்மிடி பங்காரு நகைக்கடைக்காரர்களுக்கு 28 ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மரியாதை செய்வார்.
புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவில் தமிழகத்தைச் சேர்ந்த 20 ஆதீனங்கள் பங்கேற்று செங்கோலை வழங்க உள்ளனர். திருவாவடுதுறை, தருமபுரம், திருப்பனந்தாள், வேளக்குறிச்சி, மதுரை, சூரியனார் கோயில், காமாட்சிபுரம், பேரூர், சிரவை, அவிநாசி, குன்றக்குடி, கோவிலூர், பத்திரக்குடி, பழனி , மயிலம், தொழுவூர் மற்றும் திண்டுக்கல் ஆதீனங்கள் உட்பட 20 ஆதீனங்கள் புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவில் பங்கேற்க உள்ளனர்.
நீதி, நியாயம், சமத்துவ ஆட்சிக்கான ஆசீர்வதிக்கப்பட்ட அந்த செங்கோல், நாடாளுமன்றத்தில் சபாநாயகர் இருக்கையின் அருகே வைக்கப்பட உள்ளது. பிரயாக்ராஜ் அருங்காட்சியகத்தில் அந்த செங்கோல் இருந்த விவரம் பலருக்கு தெரியாமல் இருந்தது. 1978-ல் காஞ்சி பெரியவர் செங்கோல் குறித்து பேசியிருக்கிறார். அதன் பிறகு ஊடகங்களில் அது குறித்த செய்தி வந்தது.
2021 பிப்ரவரியில் பத்மா சுப்பிரமணியம் பிரதமருக்கு செங்கோல் குறித்து கடிதம் எழுதினார். இந்நிலையில் தற்போது இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தமிழக மக்கள் அனைவரும் பெருமிதம் அடையும் வகையில் இம்முடிவு அமைந்துள்ளது. நாடாளுமன்ற கட்டட விஷயத்தில் அரசியல் செய்வதற்கான தேவை எங்களுக்கு இல்லை.
நாடாளுமன்றம் ஐனநாயகத்தின் கோயில், அந்த கோயிலுக்கான மரியாதையை அனைத்து கட்சிகளும் கொடுக்க வேண்டும். அதை புறக்கணிப்பது நல்லதல்ல, எதிர்க் கட்சிகள் தங்களது நிலைப்பாடு குறித்து மீண்டும் ஆலோசிக்க வேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள். அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் முறையாக அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. 'மூதறிஞர் ராஜாஜி , திருவாவடுதுறை ஆதீனத்துடன் பேசித்தான் சோழர் கால வழக்கப்படி அந்த செங்கோலை வழங்கலாம் என்று முடிவு செய்தார்.
மதுரை மீனாட்சி அம்மன் பங்குனி உற்சவத்தின் போது தர்ம தண்டம் எனும் செங்கோல், மீனாட்சியம்மனுக்கு வழங்கப்படும், செங்கோலை பரிமாற்றிக் கொள்வது நமது கலாசாரம். செங்கோல் குறித்து திருக்குறளில் தனி அதிகாரமே உள்ளது. செங்கோல் மத அடையாளம் இல்லை. நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத்தை திறந்து வைக்க குடியரசுத் தலைவரை ஏன் அழைக்கவில்லை என்று கேட்கிறீர்கள்.
நாடாளுமன்றத்திற்கு தலைவர் குடியரசுத் தலைவர் என்று குறிப்பிட்டு, குடியரசுத் தலைவர் மூலம் நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத்தை ஏன் திறக்கவில்லை என்று கேள்வி எழுப்புவோர், சத்தீஸ்கரில் சட்டப் பேரவைக்கு தலைவரான ஆளுநரை அழைக்காமல் சோனியா காந்தியை வைத்து புதிய சட்டப்பேரவை கட்டடத்தை திறந்தது குறித்து கேள்வி கேட்காதது ஏன்?
'நந்திகேஷ்வர், மகாலட்சுமி உருவப் படங்கள் இடம் பெற்றிருந்தாலும் செங்கோல் மத அடையாளம் இல்லை. செங்கோல் நமது கலாச்சாரம், பாரம்பரியத்தின் தொடர்பை பற்றி பேசுவதால் பிற மதத்தினர் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள்” என்றார்.