மக்களவையில் மானியங்களுக்கான துணை கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், “இந்தியாவின் பொருளாதாரம் மற்ற நாடுகளை காட்டிலும் வேகமாக வளர்ந்து வருகிறது” என கூறினார். இதனை உறுதி செய்யும் வகையில் “உற்பத்தி சொத்துக்களுக்கு போதுமான நிதியை வழங்கும் அதே வேளையில் தேவையற்ற செலவினங்கள் குறைக்கப்பட்டு வருகிறது” என அவர் குறிப்பிட்டார்.
மேலும் “நடப்பு ஆண்டில் அதிக செலவினங்கள் நிதிப் பற்றாக்குறையை ஏற்படுத்த வாய்ப்பில்லை. அரசாங்கத்தின் வருவாய் வலுவாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டிய முழுமையான ஜி.எஸ்.டி. வருவாய் வழங்கப்பட்டுள்ளது.
2018 - 19 ஆம் நிதியாண்டு முதல் தற்போது வரை மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட வேண்டிய ஜி.எஸ்.டி வருவாய் 99.32 சதவீதம் வழங்கப்பட்டுள்ளது” என சுட்டிக்காட்டினார்.
முன்னதாக 2023 – 24 நிதியாண்டுக்கான மானியங்களுக்கான முதல் தொகுதி துணைக் கோரிக்கைகளுக்கு ஒரு லட்சத்து 29 கோடி ரூபாய் கூடுதல் செலவினங்களுக்காக மக்களவையில் ஒப்புதல் பெறப்பட்டது.