சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, இம்மாதம், 9 ஆம் தேதி பெங்களூரில் நடந்த, 'நிர்பயா விருது' விழாவில், டில்லியில் பாலியல் துன்புறுத்தலில் உயிரிழந்த மாணவி நிர்பயாவின் தாய் ஆஷா தேவி மற்றும் ஐ.ஜி ரூபா ஆகியோரின் சேவையை பாராட்டி, விருது வழங்கப்பட்டது.
அவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஓய்வுப் பெற்ற, ஐ.பி.எஸ்., அதிகாரியும், காங்கிரஸ் முன்னாள் எம்.பி.,யுமான சாங்கிலியா பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது, அதாவது "ஆஷா தேவியின் (நிர்பயா தாயார்) உடலமைப்பே, இவ்வளவு கட்டுக்கோப்பாக அழகாக இருக்கிறது. அப்படியென்றால் அவர் மகள் நிர்பயா எப்படி இருந்திருப்பார். பலம் வாய்ந்த ஆண்கள் பலாத்காரம் செய்தால், அவர்களிடம் சண்டை போடாமல், சரணடைந்து விடுங்கள். அப்படி செய்தால், உயிர் பலி ஏற்படுவதை தவிர்க்கலாம். அதன் பின், நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்வோம்" என்றார் அவர்.
சாங்கிலியானாவின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சாங்கிலியாவுக்கு, நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி கடிதம் எழுதியுள்ளார் அதில் " பெங்களூரில் பெண்கள் நடத்திய நிகழ்ச்சியில் எனது ஆதரவை தெரிவிப்பதற்காகவே சென்றேன். நல்ல வேளை எனது மகளுக்கு நடந்த மோசமான பாதிப்பு எனக்கு நடக்கவில்லை. அவர் பேசியபோது நான் மேடையில் அமர்ந்து இருந்தேன். அதனால் அவர் என்ன பேசினார் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அதனால் அங்கேயே அவருக்கு பதிலளிக்கவில்லை. அங்கிருந்து பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறிய பிறகுதான் அவரது வார்த்தைகளில் இருந்த கடுமையை புரிந்துக் கொண்டேன். நீங்கள் எனது மகளுக்காக நடந்த போராட்டத்தை அவமதித்து விட்டீர்கள். நமது சமூகத்தில் பொதுவில் இருக்கும் மிக மோசமான, தரக்குறைவான வர்ணனையை பொதுமைபடுத்தி வீட்டீர்கள்’’ என்று கடுமையாக ஆஷா தேவி சாடியுள்ளார்.