டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் தாம் போட்டியிடவில்லை என நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
டெல்லியில் கடந்த 2012 ஆம் ஆண்டு ஓடும் பேருந்தில் நிகழ்ந்த பாலியல் வன்கொடுமைச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட அந்தப் பெண், சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளைக் கடுமையாக தண்டிக்க வேண்டும் எனப் பெற்றோர், மகளிர் அமைப்பினர், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் அம்மாநில முதல்வர் கெஜ்ரிவாலுக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி களமிறக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இந்தத் தகவலை மறுத்துள்ள ஆஷா தேவி, தமக்கு அரசியலில் விருப்பம் இல்லை என்றும், இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியில் யாரிடமும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றும் தெரிவித்துள்ளார். தனது மகளின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே தமது விருப்பம் என்றும், குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டு தண்டிக்கப்படுவதையே தாம் எதிர்பார்ப்பதாகவும் ஆஷா தேவி கூறினார்.
இதனிடையே நிர்பயா குற்றவாளிகள் 4 பேரை பிப்ரவரி 1ஆம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிட டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.