'வலியை உணர்ந்த அந்த நொடியில் எடுத்த சபதம்!' - நிர்பயா கடைசி நிமிடங்களை விவரித்த ஆஷா தேவி!

'வலியை உணர்ந்த அந்த நொடியில் எடுத்த சபதம்!' - நிர்பயா கடைசி நிமிடங்களை விவரித்த ஆஷா தேவி!
'வலியை உணர்ந்த அந்த நொடியில் எடுத்த சபதம்!' - நிர்பயா கடைசி நிமிடங்களை விவரித்த ஆஷா தேவி!
Published on

’’12 நாட்கள் என் மகளின் போராட்டத்தை பார்த்த, வலியை உணர்ந்த அந்த நொடி பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக குரல் எழுப்புவேன், நீதிக்காக போராடுவேன் என்று சபதம் எடுத்தேன்’’ என்று கூறியுள்ளார் நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி.

2012‌ டிசம்பர் 16... ஒட்டு மொத்த இந்தி‌யர்களையும் உணர்ச்சிக் கொந்தளிப்பில் ஆழ்த்திய அந்தக் கொடூர‌ சம்பவம் அன்றுதான் அரங்கேறியது. தலைநகர் டெல்லியில், இருள் சூழ்ந்த இரவு‌வேளையில், ஓடும் பேருந்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார், 23 வயதான இளம் மருத்துவ மாணவி. சிங்கப்பூர் வரை அழைத்து சென்று சிகிச்சை அளித்தபோதிலும், அடுத்த 1‌3 நாட்களிலேயே அவரின் உயிர் பிரிந்தது. தைரியமான பெண் என பொருள்படும் வகையில் நிர்பயா என்றழைக்கப்பட்ட அவருக்கு நேர்ந்த துயரம்‌‌, ஒட்டுமொத்த பெண் சமூகத்தின் பாதுகாப்பு குறித்த பல கேள்விகளை எழுப்பியது. இன்றோடு இந்தக் கொடூர சம்பவம் நிகழ்ந்து 8 வருடங்கள் முடிந்துவிட்டன.

இந்த வழக்கில் முகேஷ் சிங்,‌ வினய் சர்மா, பவன்குப்தா, அக்‌ஷய்குமார் ஆகியோருக்கு மார்ச் மாதம் 20ம் தேதி தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதற்கிடையே, தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்ட கிட்டத்தட்ட 9 மாதங்களுக்குப் பிறகு, நிர்பயாவின் தாய் ஆஷா தேவி பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியிருக்கிறார்.

எ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், "நிர்பயாவுக்கு நீதி கிடைத்துவிட்டது. இந்திய வரலாற்றில் முதல்முறையாக நான்கு கொடூர குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. அவர்கள் தூக்கிலிடப்பட்ட பின்னர் இது முதல் டிசம்பர் 16 ஆகும். அவர்களுக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பு சமுதாயத்தில் இருக்கும் மிருகத்தனமான குற்றவாளிகளுக்கு எந்த கருணையும் காட்டப்படாது என்ற ஒரு வலுவான செய்தியை தெளிவுபடுத்தியுள்ளது.

பாலியல் வன்கொடுமைகளில் இருந்து தப்பி நீதிக்காக போராடுபவர்களிடையே இந்தத் தீர்ப்பு சட்ட நம்பிக்கையை மீண்டும் ஏற்படுத்தியுள்ளது. என் மகள் நிர்பயாவுக்கு நீதி கிடைத்துவிட்டது என்பதனால் நான் மவுனமாக உட்கார்ந்து விடுவேன் என்று நினைக்க வேண்டாம். பாலியல் வன்கொடுமையாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி கிடைக்க தொடர்ந்து போராடுவேன். அதன்மூலம் நான் என் மகளுக்கு அஞ்சலி செலுத்துவேன்.

பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கு எதிராக அனைவரும் குரல் எழுப்ப வேண்டும். 8 ஆண்டுகளுக்கு முன் பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கு எதிராக குரல் எழுப்புவதாக நான் உறுதியளித்துள்ளேன். அந்த உறுதிமொழி எதிர்காலத்தில் தொடரும்'' என்ற ஆஷா தேவி, நிர்பயா தனது கடைசி காலகட்டங்களில் சிங்கப்பூர் மருத்துவமனையில் சுமார் 10-12 நாட்கள் உயிருக்கு போராடிய நாட்களை வேதனையுடன் நினைவுகூர்ந்துள்ளார்.

நிர்பயா, மரணத்துடன் சண்டையிடும் அந்த வலியை நேரில் கண்ட ஆஷா தேவி, ``அந்த 12 நாட்களும் என் மகள் ஒரு சொட்டு நீர் கூட குடிக்காமல் மரணத்தை எதிர்த்து போராடினார். அவரின் போராட்டத்தை பார்த்த அந்த வலியை உணர்ந்த அந்த நொடி பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக குரல் எழுப்புவேன், நீதிக்காக போராடுவேன் என்று சபதம் எடுத்தேன். அதற்காக இப்போது போராடி வருகிறேன். இப்போது எனது மகள் நிர்பயாவை ஒவ்வொரு பெண்ணின் முகத்திலும், பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளான ஒவ்வொருவரின் முகத்திலும் பார்த்து வருகிறேன" என கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com