நிர்பயா வழக்கின் சீராய்வு மனு மீதான விசாரணையிலிருந்து தலைமை நீதிபதி பாப்டே விலகினார்.
கடந்த 2012ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16ஆம் தேதி மருத்துவ மாணவி ஒருவர் ஓடும் பேருந்தில் ஆறு பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களுக்கு தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், குற்றவாளிகளில் ஒருவரான அக்ஷய் குமார் சிங், தனக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, மூத்த நீதிபதிகள் பானுமதி மற்றும் அஷோக் பூஷண் ஆகியோர் கொண்ட அமர்வு இன்று விசாரிக்க இருந்தது. இந்நிலையில் நிர்பயா வழக்கின் சீராய்வு மனு மீதான விசாரணையில் இருந்து தலைமை நீதிபதி பாப்டே விலகியுள்ளார்.