டெல்லியில் நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் நிர்பயா மீதுதான் தவறும் என்றும், பெண்கள் ஜீன்ஸ், லிப்ஸ்டிக் போன்றவற்றை அணியக்கூடாது என்றும் ஆசிரியர் ஒருவர் மாணவிகளை எச்சரித்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
கடந்த 2012ஆம் ஆண்டு, டிசம்பர் 16-ஆம் தேதி டெல்லியில் துணை மருத்துவப் படிப்பு படித்து வந்த மாணவி நிர்பயாவை, 6 பேர் அடங்கிய கும்பல் ஓடும் பேருந்தில் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்து, இரும்பு கம்பியால் சிதைத்து வெளியே தூக்கி வீசினர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நிர்பயா வழக்கில் நீதிகேட்டு நாடு முழுவதும் பல போராட்டங்களும் நடைபெற்றன.
இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்பூரில் செயல்பட்டு வரும் கேந்திரிய வித்யாலாயா பள்ளி ஆசிரியை ஒருவர், மாணவர்கள் மத்தியில் பேசும்போது, நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் நிர்பயா மீதுதான் தவறு என விமர்சித்துள்ளார். அதில் குற்றவாளி மீது எந்தத் தவறும் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார். நிர்பயா ஏன் இரவு நேரத்தில் ஆண் தோழருடன் வெளியே சென்றார் எனவும் அந்த ஆசிரியை வினவியுள்ளார். மாணவிகள் ஜீன்ஸ், லிப்ஸ்டிக் அணிவதற்கு எதிராகவும், இரவு நேரங்களில் ஆண்களுடன் வெளியே செல்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பேசும்போது அந்த ஆசிரியை இதனை தெரிவித்துள்ளார்.
பொலிவிழந்த, அழகற்ற முகங்களைக் கொண்ட பெண்கள்தான் தங்களது உடல் வெளியே தெரியும் அளவிற்கு ஆடைகள் அணிவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக விசாரணை நடத்த பள்ளி முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.