நிபா வைரஸ் கட்டுக்குள் உள்ளதால், ஜூன் 6 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று எர்ணாகுளம் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலத்தில் கடந்த வருடம் நிபா வைரஸ் காய்ச்சல் பரவியது. இதில் 17 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் மீண்டும் நிபா வைரஸ் காய்ச்சல் பரவியுள்ளதாக மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. எர்ணாகுளத்தில் உள்ள தனியார் மருத்துவ மனையில் இளைஞர் ஒருவர் நிபா வைரஸ் காய்ச்சல் அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இதை கேரள சுகாதாரத்துறை அமைச்சரும் உறுதி செய்துள்ளார். ஆனாலும் சோதனை முடிவுகள் வெளிவந்த பின்னரே உறுதியான தகவல் வெளியாகும் என கூறப்பட்டது. கேரளாவில் நிபா வைரஸுக்கு 23 வயது கல்லூரி மாணவர் பாதிக்கப்பட்டதை அடுத்து, அம்மாநிலம் முழுவதும் உஷார் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது.
இந்நிலையில், நிபா வைரஸ் கட்டுக்குள் உள்ளதால், ஜூன் 6 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று எர்ணாகுளம் மாவட்ட ஆட்சியர் முகமது சபிருல்லா தெரிவித்துள்ளார். “பள்ளிகள் திட்டமிட்டபடி ஜூன் 5 ஆம் தேதி திறக்கப்படும். நிபா வைரஸ் குறித்து யாரும் பீதி அடைய தேவையில்லை. அது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது” என்றும் அவர் கூறினார்.
மேலும், “கொச்சி மருத்துவமனையில் நிபா வைரஸ் உறுதி செய்யப்பட்டதும், அந்த வைரஸ் பரவாமல் இருப்பதற்கான தடுப்பு நடவடிக்கைகள் முடிக்கிவிடப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கும் நிபா வைரஸ் குறித்து விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது. தற்போதைக்கு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது” என்று கூறினார்.