சாலைகளில் உள்ள வேகத்தடைகளால் ஏற்படும் விபத்துக்கள் மூலம் நாள் ஒன்றுக்கு 9 பேர் உயிரிழப்பதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
உலக அளவில் சாலை விபத்துக்கள் அதிகம் ஏற்படும் நாடுகளில் இந்தியா முன்னிலை வகிக்கிறது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்நிலையில், வேகத்தடைகளால் ஏற்படும் விபத்துக்கள் மூலம் நாள் ஒன்றுக்கு 9 பேர் உயிரிழப்பதாக அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். அதாவது,
சாலைகளில் அமைந்துள்ள வேகத்தடையால் ஏற்பட்ட விபத்துகள் காரணமாக கடந்த 2015 ஆம் ஆண்டில் 11,084 விபத்துக்கள் ஏற்பட்டு 3,409 பேர் உயிரிழந்துள்ளனர். 9,704 பேர் காயமடைந்துள்ளனர். 2014 ஆம் ஆண்டில் 3,633 பேர் உயிரிழந்துள்ளனர். 9,428 பேர் காயமடைந்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற விபத்துகளைத் தடுக்க, தேசிய நெடுஞ்சாலைகளில் வேகத்தடைகள் அமைக்க வேண்டாம் என்றும், ஏற்கனவே இருக்கும் வேகத்தடைகளை நீக்க வேண்டும் என்றும், தேவையான இடங்களில் மட்டும் சிறிய அளவிலான வேகத்தடைகளை அமைக்க வேண்டும் என்றும் நிதின் கட்கரி கூறியுள்ளார். மேலும், நெடுஞ்சாலைகளில் வாகனங்களில் செல்வோர் குறைந்த வேகத்தில் செல்லவும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.