பாஜகவில் சேர்ந்த மற்றொரு பட்டேல் சமூக தலைவரும் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
ஹர்திக் படேலின் இயக்கமான ‘பட்டிதர் அனமத் அன்டோலன் சமிதி’யின் உள்ளூர் தலைவரான நரேந்திர படேல், நேற்று மாலை தான் பாஜகவில் இணையப் போவதாக அறிவித்தார். திடீரென சில மணி நேரங்கள் கழித்து நேற்று இரவு, பாஜகவில் இணைவதற்காக ரூ.1 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாகவும், மனசாட்சி இடம் கொடுக்காததால் தனது முடிவை மாற்றிக் கொள்ள விரும்புவதாகவும் கூறினார்.
இந்த நிலையில், பட்டிதர் அனமத் அன்டோலன் சமிதி அமைப்பை சேர்ந்த நிஹில் சவானி பாஜவில் இருந்து விலகுவதாக இன்று அறிவித்துள்ளார். நிஹில் சவானியும் ஹர்திக் பட்டேலுக்கு நெருக்கமானவர்.
இது தொடர்பாக செய்தியாளார்களிடம் பேசிய அவர், “நரேந்திர பட்டேலுக்கு ரூ.1 கோடி பேரம் பேசப்பட்டதாக கேள்விப்பட்டேன். வருத்தமாக உள்ளது. நரேந்திர பட்டேலை பாராட்டுகிறேன். சிறிய குடும்பத்தில் இருந்து வந்தவர். ஆனாலும், அவர் ரூ.1 கோடியை வாங்கிக் கொள்ளவில்லை. எனக்கு பாஜகவில் சேர எந்த பேரமும் பேசப்படவில்லை. நான் தற்போது ராஜினாமா செய்கிறேன். எனக்கு வாய்ப்பு அளித்தது ஒரு ஏமாற்று வேலை. போலியான வாக்குறுதிகளை கூறி ஏமாற்றிவிட்டார்கள். எந்த கோரிக்கைகளையும் அவர்கள் நிறைவேற்றவில்லை. மீண்டும் ஹர்திக் பட்டேலுடன் இணைந்து செயல்பட விரும்புகிறேன்” என்றார்.
இதனையடுத்து, குஜராத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தியை நிஹில் சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்து அவர் கூறுகையில், “பட்டிதர் அனமத் அன்டோலன் சமிதி அமைப்பு பற்றியும் பட்டேல் சமூகத்தினருக்கான சமூக நீதி பற்றியும் தன்னுடைய கருத்துக்களை ராகுல்காந்தியிடம் தெரிவித்தேன்” என்றார்.
நிஹில் சவானி, நரேந்திர படேல் இருவரும் இரு தினங்களுக்கு முன்பு தான் பாஜகவில் இணைந்தனர். குஜராத் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இதுபோன்ற சம்பவம் நடைபெறுவது அதிக அளவில் பணம் விளையாடுவதை குறிப்பதாக ஹர்திக் பட்டேல் தெரிவித்துள்ளார்.