வெள்ள நீரில் கல்லூரி மாணவி ஒருவர் எடுத்த போட்டோ ஷூட் சமூக வலைத்தளங்களில் மிகவும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
பீகார் மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் பலத்த மழையால், தலைநகர் பாட்னா உள்ளிட்ட பல நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. பாகல்பூர் மற்றும் கைமூர் மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. பல இடங்களில் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மழை தொடர்பான சம்பவங்களில் இதுவரை 29 பேர் உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தேசிய பேரிட் மீட்புப் படையினர் மீட்புப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் அங்கு கல்லூரி மாணவி ஒருவர் வெள்ள நீரில் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். பாட்னாவில் தேசிய ஆடை வடிவமைப்பு கல்லூரியில் அதிதி சிங் பயின்று வருகிறார். இவர் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் பல்வேறு சாலையின் பின்னணியில் நின்று உற்சாகத்துடன் ஃபோட்டோ ஷூட் நடத்தியுள்ளார். பல்வேறு கோணங்களில் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் பரபரப்பாக பேசப்படுகிறது. சிலர் இது பீகார் மக்களின் அவல நிலையை கிண்டல் செய்வது போல் உள்ளது எனத் தெரிவித்துள்ளனர்.
இந்த போட்டோ ஷூட்டை எடுத்த சவுரவ் அனுராஜ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில், “இந்த போட்டோ ஷூட்டின் நோக்கம் மக்களின் கவனத்தை பீகார் வெள்ளத்தின் பக்கம் திருப்பவே ஆகும். ஏனென்றால் மற்ற மாநிலங்களில் மழை வெள்ளம் ஏற்பட்டால் நாட்டிலுள்ள மக்கள் அனைவரும் முன்வந்து உதவி செய்கிறார்கள்.
ஆனால் தற்போது பீகார் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் குறித்து பிற மாநில மக்களுக்கு சரியான தகவல் போய் சேரவில்லை. இது தொடர்பான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டால் அதை பார்ப்பவர்கள் தங்களின் வருத்தத்தை மட்டும் பதிவு செய்துவிட்டு சென்றுவிடுவார்கள். அவர்கள் இந்தப் புகைப்படத்தின் நிலையை பார்க்க மாட்டார்கள். எனவே தான் நான் இந்த போட்டோ ஷூட்டை எடுத்தேன்” எனத் தெரிவித்துள்ளார்.