நிழலுலக தாதா தாவூத் இப்ராஹிமுடன் தொடர்புடையவர்கள் என கருதப்படும் பலருக்கு சொந்தமான இடங்களில் தேசிய பாதுகாப்பு முகமை சோதனை நடத்தியுள்ளது. பிப்ரவரி மாதத்திலே பதிவு செய்யப்பட்ட ஒரு வழக்கின் அடிப்படையில் இந்த சோதனைகள் திங்கட்கிழமையன்று நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த ஒரு அமைச்சர் உள்ளிட்ட பலர் சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குவிந்த புகார்களின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்போது சோதனைகள் நடைபெற்று வருகின்றன.
சலீம் குரேஷி என்பவரிடம் தொடர் விசாரணை நடைபெறுவதாகவும் தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் தெரிவித்தனர். இவர் பாகிஸ்தான் நாட்டில் தாவூத் இப்ராஹிம் மாபியா கும்பலுடன் இணைந்து சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் சோட்டா ஷகீல் என்பவரின் கூட்டாளி என தேசிய பாதுகாப்பு முகமைக்கு தகவல் கிடைத்துள்ளது. சலீம் குரேஷியை பெண்டி பஜார் பகுதியிலுள்ள அவரது இல்லத்தில் சுற்றிவளைத்த தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள், அவர் சோட்டா ஷகிலின் உறவினர் என தெரிவித்துள்ளனர்.
போதை மருந்து கடத்துபவர்கள் சட்டவிரோத ஹவாலா நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மற்றும் பல குற்ற பின்னணி உடையவர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்றதாக தேசிய பாதுகாப்பு முகமை தெரிவித்துள்ளது. மும்பை நகரில் மொத்தம் 20 இடங்களில் சோதனை நடைபெற்றுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சோதனைகளில் கண்டறியப்படும் தகவல்களின் அடிப்படையில் கூடுதல் விசாரணை நடைபெறும் என தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான் நாட்டில் தஞ்சம் புகுந்துள்ள தாவூத் இப்ராஹிம் மற்றும் அவருடைய மாபியா கும்பல் அங்கிருந்து மும்பை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடத்தல் உள்ளிட்ட பல சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக தேசிய பாதுகாப்பு முகமைக்கு புகார்கள் கிட்டியுள்ளன.
-கணபதி சுப்பிரமணியம்