பெங்களூரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முஸ்ஸாவீர் ஹுசைன் ஷாஸிப், அப்துல் மதீன் அகமது டாஹா, மாஸ் முனீர் அகமது, முழமில் ஷரீஃப் ஆகியோர் குற்றவாளிகள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இவர்கள் கிரிப்டோகரன்சி மூலம் நிதியுதவி பெற்று, அதன்மூலம் பெங்களூரில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட திட்டம் தீட்டி இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அயோத்தி ராமர் கோயில் சிலை பிரதிஷ்டை விழாவன்று, பெங்களூரு மல்லேஸ்வரம் பகுதியில் உள்ள மாநில பாஜக தலைமை அலுவலகம் மீது தாக்குதல் நடத்த இவர்கள் திட்டமிட்டிருந்ததாகவும், எனினும் சில காரணங்களால் அந்த சதித்திட்டத்தை அவர்களால் செயல்படுத்த முடியாமல் போனதாகவும் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக பெங்களூரில் உள்ள ராமேஷ்வரம் கபே உணவகத்தில் கடந்த மார்ச் 1ஆம் தேதி நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு சம்பவத்தில் 9 பேர் காயமடைந்தனர். இந்த வழக்கை தேசிய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் விசாரித்துவரும் நிலையில், அவர்கள் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் இந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.