ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய இளைஞர் கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சமீபத்தில் இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தின் வேதனை இன்னும் அனைவரது நெஞ்சையும் விட்டு விலகவில்லை. தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் என பல இடங்களில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் 350-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் தேசிய தவ்ஹீத் ஜமாத் தலைவரான ஜஹ்ரான் ஹாஷிம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்நிலையில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய இளைஞர் கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளார். பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த ரியாஸ் அபூபக்கர் என்ற இளைஞரை தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்பு வைத்ததும், கேரளாவில் தற்கொலை தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததும் தெரியவந்துள்ளது. அத்துடன் ஜஹ்ரான் ஹாஷிமின் பேச்சுகளை ஒரு வருடத்திற்கும் மேலாக ரியாஸ் அபூபக்கர் தொடர்ச்சியாக கேட்டு பின்பற்றி வந்தது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள ரியாஸ் அபூபக்கர் தேசிய புலனாய்வு அமைப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
முன்னதாக ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாக சந்தேதிக்கப்பட்ட 6 பேர் கோவையில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்களும் ஜஹ்ரான் ஹாஷிம் பேச்சுகளை விரும்பி கேட்டது தெரியவந்தது. அவர்கள் தமிழகத்தில் உள்ள இந்த தலைவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியதும் விசாரணையில் தெரியவந்ததாக கூறப்பட்டது.