தேசிய புலனாய்வு அமைப்பிற்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு பதவியேற்ற பின்பு தேசிய புலனாய்வு அமைப்பு சட்டத் திருத்த மசோதாவை கொண்டு வர முடிவு எடுத்தது. இதனையடுத்து, என்.ஐ.ஏவுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் இந்தச் சட்டத்திருந்த மசோதாவை கடந்த 8ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் தாக்கல் செய்தார்.
இந்நிலையில் இன்று இந்த மசோதா மீதான விவாதம் மக்களவையில் இன்று நடைபெற்றது. இந்த மசோதாவிற்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தச் சட்டத் திருத்த மசோதாவின் அதிகாரத்தை மத்திய அரசு தவறாக பயன்படுத்தக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதற்கு பதிலளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “மத்திய அரசு இந்தச் சட்டத்தை தவறாக பயன்படுத்தாது. இந்தச் சட்டத்தின் மூலம் மத்திய அரசு பயங்கரவாதத்தையே ஒடுக்க நினைக்கிறது. மேலும் இந்த வழக்குகளுக்கு ஒரு சிறப்பு நீதிமன்றம் அமைப்பது விசாரணையை விரைவில் முடிக்க வழிவகுக்கும். ஏனென்றால் இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதி ஓய்வு பெற்றுவிட்டால் ஒரு புதிய நீதிபதி வரும் வரை இந்த வழக்கு நிலுவையில் இருக்கும். இந்த நிலை இனி இருக்காது. அத்துடன் இந்த வழக்குகள் சாட்சி அளிப்பவர்களுக்கும் உரிய பாதுகாப்பு அளிக்கப்படும்” எனத் தெரிவித்தார். இதனையடுத்து நடந்த வாக்கெடுப்பில் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
தேசிய புலனாய்வு அமைப்பு சட்டத் திருத்த மசோதாவில் இரண்டு முக்கிய திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்தச் சட்டத்தின் கீழ் வரும் குற்றங்கள் அனைத்தையும் மத்திய அளவிலுள்ள ஒரு சிறப்பு புலனாய்வு அமைப்பு விசாரிக்கும். அதேபோல இச்சட்டத்தின் கீழ் வரும் வழக்குகளை விசாரிக்க ஒரு சிறப்பு நீதிமன்றமும் அமைக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.