சுற்றுச்சூழலை மாசடைய வைத்ததாக வோக்ஸ்வேகன் கார் நிறுவனத்திற்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ரூ.500 கோடி அபராதம் விதித்துள்ளது.
இந்த உத்தரவைப் பிறப்பித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயத் தலைவர் ஏ.கே.கோயல், வோக்ஸ்வேகன் நிறுவனம் 2 மாதத்திற்குள் இந்தத் தொகையை டெபாசிட் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். முன்னதாக, இதுதொடர்பான வழக்கில் வோக்ஸ்வேகன் நிறுவனம் இடைக்கால அபராதமாக ரூ.100 கோடியை மத்திய சுற்றுச்சூழல் கண்காணிப்பு ஆணையத்திடம் செலுத்த பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது. வோக்ஸ்வேகன் டீசல் கார்கள் முறைகேடான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதாக சிலர் பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இதையடுத்து தீர்ப்பாயம் நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்ததில் முறைகேடு நடைபெற்றது உறுதியானது. இதையடுத்து அக்குழு வோக்ஸ்வேகனுக்கு 171 கோடியே 34 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்க பரிந்துரைத்திருந்தது. இந்தியா தவிர பிற வெளிநாடுகளிலும் இதேபோன்ற குற்றச்சாட்டுகளுக்கு ஆளான வோக்ஸ்வேகன் நிறுவனம் பெருந்தொகையை அபராதமாக செலுத்தியிருந்தது. இத்தவறுக்காக அந்நிறுவனம் பகிரங்க மன்னிப்பும் கேட்டிருந்தது. வோக்ஸ்வேகன் கார்களிலிருந்து வெளியாகும் புகையில் ஆபத்தான நைட்ரஜன் ஆக்சைடு அதிளவில் இருந்தது.
ஆனால், சோதனைகளின்போது அதை மறைப்பதற்காக சிறப்பு மென்பொருள் மற்றும் கருவிகள் பொருத்தப்பட்டிருந்தது என்பது அந்நிறுவனத்தின் மீதான குற்றச்சாட்டாகும். வேறு எந்த கார்களையும் விட தங்கள் கார்கள் மிகக்குறைவாகவே மாசை வெளிப்படுத்துவதாக விளம்பரப்படுத்தி, அதனால் வோக்ஸ்வேகன் பெரும் ஆதாயம் பெற்றதாக கூறப்பட்டது. ஆனால் மாசின் அளவை முறைகேடான வழியில் குறைத்துக்காட்டியது பின்னர் தெரியவந்தது. இதன் காரணமாகவே இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.