ஃபோக்ஸ்வாகன் நிறுவனம் நாளை (ஜனவரி 18) மாலை 5 மணிக்குள் ரூ.100 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என்று பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது
ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ஃபோக்ஸ்வாகன் கார் நிறுவனத்துக்கு இந்தியா மிகப்பெரிய சந்தையாக இருக்கிறது. இந்நிலையில் ஃபோக்ஸ்வாகன் கார்கள் அதிக அளவில் நைட்ரஜன் ஆக்ஸ்சைடை வெளியிடுவதாகவும், இதனால் காற்று மாசடைவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து 4 பேர் கொண்ட குழுவை அமைத்து பசுமை தீர்ப்பாயம் விசாரணை மேற்கொண்டது.
அதில் 2016 -ம் ஆண்டில் மட்டும் 48.678 டன் நைட்ரஜன் ஆக்ஸ்சைடை ஃபோக்ஸ்வாகன் கார்கள் டெல்லியில் வெளியிட்டதாக அறிக்கை அளிக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஃபோக்ஸ்வாகன் நிறுவனத்துக்கு ரூ.171 கோடி அபராதம் விதித்தது பசுமை தீர்ப்பாயம். ஆனால் அபராதத்தொகையை ஃபோக்ஸ்வாகன் நிறுவனம் இதுவரை செலுத்தவில்லை.
இந்த விவகாரத்தை இன்றும் மீண்டும் கவனத்தில் கொண்டுவந்த பசுமை தீர்ப்பாயம் இந்திய மாசு கட்டுபாட்டு விதிமுறைகளை மீறிய ஃபோக்ஸ்வாகன் நிறுவனம் நாளை (ஜனவரி 18) மாலை 5 மணிக்குள் ரூ.100 கோடி செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது. மேலும் அபராதத்தொகையை செலுத்த தவறினால் இந்தியாவில் உள்ள ஃபோக்ஸ்வாகன் நிறுவனத்தின் சொத்துகள் முடக்கப்படும் அல்லது இந்திய நாட்டிற்கான ஃபோக்ஸ்வாகன் நிறுவனத்தின் தலைவர் கைது செய்யப்படுவார் என்ற கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.