நடந்து முடிந்த நீட் தேர்வில் வழங்கப்பட்ட தமிழ் வினாத்தாளில் 49 இடங்களில் மொழிப் பெயர்ப்பு பிழைகள் உள்ளன.
நீட் தேர்வில் ஆங்கிலம், ஹிந்தி மொழிகள் அல்லாமல் 9 பிராந்திய மொழிகளில் வினாத்தாள் வழங்கப்படுகின்றன. பிற மொழி வினாத் தாள்களில் ஆங்கில மொழியிலும் வினாக்கள் இடம்பெற்றிருக்கும். அந்த வகையில் தமிழில் வழங்கப்பட்டிருக்கும் வினாத்தாளில் சரியான மொழிப் பெயர்ப்பு இல்லாததால் 49 இடங்களில் பிழைகள் ஏற்பட்டிருக்கின்றன. இதனால் மாணவர்கள் தவறான விடையளிக்க நேரலாம் எனக் குற்றம்சாட்டியுள்ளது தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று.
Cheetahவிற்கு சிறுத்தை என மொழிப் பெயர்க்காமல் சீத்தா என மொழிப் பெயர்த்திருக்கிறது சி.பி.எஸ்.இ. இதேபோல், கூட்டுறவு என்ற சொல்லுக்கு பதில் பகிர்ந்துறவு என்றும், வெளவாலுக்கு பதிலாக வவனவால் என்றும், ஆக்டோபஸ்ஸுக்கு பதில் ஆதடபஸ் என்று மொழிப் பெயர்க்கப்பட்டுள்ளது. புத்தகத்தில் உள்ளது போன்று நேரடிக் கேள்விகளாக அல்லாமல் வினாக்கள் கேட்கப்படும் எனக் கூறப் படுகையில் இத்தகைய பிழைகள் குழப்பத்தை ஏற்படுத்தும் எனக் கூறுகின்றனர் நீட் பயிற்சியாளர்கள்
தமிழ் மொழியில் வல்லுநர்களைக் கொண்டு மொழிப் பெயர்க்காததும், நீட் தேர்வுக்கு தமிழில் புத்தகம் இல்லாததும் இதுபோன்ற பிழைகள் ஏற்படுவதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. மாணவர்களின் எதிர்காலம் சார்ந்த இது போன்ற விஷயங்களில் சி.பி.எஸ்.இ கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்பதே கல்வியாளர்கள், மாணவர்களின் கோரிக்கையாக உள்ளது.