மகாராஷ்டிராவில் உள்ள கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு புதுமணத் தம்பதி 50 படுக்கைகளை நன்கொடையாக வழங்கியுள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் வசை பகுதியை சேர்ந்த எரிக் லோபோ மற்றும் மெர்லின் டுச்கேனோ ஆகியோருக்கு கடந்த ஜூன் 20-ஆம் தேதி சர்ச்சில் எளிமையாக திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்காக வைத்திருந்த எஞ்சிய பணத்தில் புதுமணத் தம்பதியினர், கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு 50 படுக்கைகள், மெத்தைகள், தலையணைகளை நன்கொடையாக வழங்கியுள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், “ஊரடங்கு தொடக்கத்திலிருந்து, புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ரயில்களை ஏற்பாடு செய்வது போன்ற திட்டங்களில் நாங்கள் பணியாற்றி வருகிறோம். கொரோனா மையங்களில் உள்ள தேவைகள் குறித்து மாவட்டத்தின் வருவாய் ஆய்வாளர் மற்றும் துணைப்பிரிவு அதிகாரியிடம் பேசினோம். திருமணத்திற்கு நாங்கள் செலவழிக்கும் பணத்தை குறைக்க முடிவு செய்தோம். அதற்கு பதிலாக கொரோனா பராமரிப்பு மையத்திற்கு எங்களால் முடிந்ததை செய்தோம். நாங்கள் ஆக்ஸிஜன் சிலிண்டர்களையும் மையத்திற்கு நன்கொடையாக அளிப்போம்” எனத் தெரிவித்தனர்.