உத்தர பிரதேசம் மாநிலம் ஃபிரோசாபாத்தில் திருமணமாகி சில நாட்களே ஆன புதுமணப் பெண் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு மாப்பிள்ளை உடல்நலக் குறைவால் இறந்துள்ளார். ஆனால் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படவில்லை.
இதுகுறித்து தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் நீட்டா குல்ஷ்ரேஸ்தா கூறுகையில், ‘’திருமணமானவுடனே மாப்பிள்ளைக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு டிசம்பர் 4ஆம் தேதி அவர் இறந்துவிட்டார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படாததால், கொரோனாத் தொற்றால்தான் இறந்தார் என்று உறுதியாக சொல்லமுடியாது. ஆனால் மணப்பெண், இறந்தவரின் தாயார் மற்றும் சகோதரர் உட்பட 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது, அவர்கள் அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது’’ என்று கூறினார்.
இதுவரை ஃபிரோசாபாத் மாவட்டத்தில் 3,673 பேருக்கு கொடோனா தொற்று உறுதி செய்யப்பட்டு பலர் குணமடைந்த நிலையில், தற்போது 171 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர். இதுவரை 67 பேர் உயிரிழந்துள்ளனர்.