திருமணமான 10 நாட்களில் காதலனுடன் சேர்ந்து ரவுடிகளை ஏவி கணவனை கொலை செய்த இளம்பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் கவுரி சங்கர். அவருக்கும், அவரது சகோதரி மகள் சரஸ்வதிக்கும் கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. பல்வேறு கனவுகளுடன் திருமண வாழ்க்கையைத் தொடங்கிய கவுரி சங்கர், தனக்கு இப்படி ஒரு துயரம் நேரும் என நினைத்துப் பார்த்திருக்கமாட்டார். கடந்த திங்கட்கிழமை இரவு வெளியே சென்றுவிட்டு கவுரிசங்கரும், அவரது மனைவியும் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது தங்களை கொள்ளையர்கள் வழிமறித்ததாகவும், தடுக்க முயன்ற கவுரி சங்கரை அவர்கள் கொலை செய்துவிட்டதாகவும் உறவினர்களுக்கு தொலைபேசி மூலமாக தகவல் தெரிவித்தார் சரஸ்வதி.
பதறிப்போன உறவினர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று சரஸ்வதியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். விசாரணையில், முன்னுக்குப்பின் முன் முரணான தகவல் அளித்ததால், சரஸ்வதி மீது காவல்துறைக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அவரிடம் பேச்சுக் கொடுத்தபோது, கணவர் கொல்லப்பட்ட சோகமே இல்லாமல், இயல்பாகவே இருந்திருக்கிறார் சரஸ்வதி. இதனால், அவரது கைப்பேசியில் உள்ள அழைப்பு விவரங்களைப் பார்த்தபோது, சிவா என்பவருக்கு அதிகம் பேசியிருப்பது தெரியவந்தது.
இதன்பின்னர் மேற்கொள்ளப்பட்ட தொடர் விசாரணையில், விசாகப்பட்டிணத்தைச் சேர்ந்த சிவா என்பவரை காதலித்ததாக சரஸ்வதி தெரிவித்துள்ளார். தாய்மாமன் கவுரி சங்கர் தன்னை செலவு செய்து படிக்க வைத்த காரணத்தால், தன்னை கட்டாயப்படுத்தி அவருக்கு திருமணம் செய்து வைத்துவிட்டதாகவும் சரஸ்வதி வாக்குமூலம் அளித்துள்ளார். காதலர் சிவாவை பிரிய மனமில்லாமல், அவருடன் சேர்ந்து கணவரை திட்டம் போட்டு தீர்த்துக் கட்டியதையும் ஒப்புக்கொண்டுள்ளார் சரஸ்வதி. இதையடுத்து சரஸ்வதியின் காதலன் சிவா, விசாகப்பட்டினத்தை சேர்ந்த ரவுடி கோபி அவரது கூட்டாளிகள் உள்ளிட்டோரை 4 மணிநேரத்தில் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.