நடனம், விளையாட்டு, உடற்பயிற்சி போன்றவற்றில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் நபர்கள், சமீபகாலமாக எதிர்பாராதவிதமாக திடீரென கீழேவிழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகமாகி வருகின்றன. அதிலும், கொரோனாவுக்குப் பிந்தைய காலகட்டத்தில் இளைஞர்கள் பலர் மாரடைப்பால் திடீரென உயிரிழப்பது தொடர்கதையாகி வருகின்றன. அந்த வகையில், புது மாப்பிள்ளை ஒருவர், திருப்பதிக்குச் செல்லும் வழியிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
தமிழ்நாட்டின் திருத்தணியைச் சேர்ந்தவர் நரேஷ். இவருக்கும் ஸ்வாதி என்ற பெண்ணுக்கும் கடந்த 15 நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்த நிலையில், பெற்றோரின் வேண்டுதலை நிறைவேற்ற (நேர்த்திக்கடனை) திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க, நரேஷ் தனது குடும்பத்தினருடன் நேற்று திருப்பதி சென்றுள்ளார். அலிபிரி நடைபாதை வழியாக நரேஷ் குடும்பத்துடன் சென்றுகொண்டிருந்த நிலையில், 2,350வது படி ஏறியுள்ளார்.
அப்போது திடீரென அங்கேயே சுருண்டு விழுந்துள்ளார். இதனால் பதறிப்போன குடும்பத்தினர் உடனே அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மருத்துவமனையில் நரேஷை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். மேலும், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
திருமணம் முடிந்து 15 நாளில் புது மாப்பிள்ளை மாரடைப்பு ஏற்பட்டு பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.