உலகின் மூத்த ஜனநாயக நாடுகளில் ஒன்றான அமெரிக்காவில், அதிபர் தேர்தல் பிரச்சாரங்கள் சூடு பிடித்துள்ளன. இந்தநிலையில், அந்த நாட்டின் முக்கிய நாளிதழ்களில் ஒன்றான ‘நியூ யார்க் டைம்ஸ்’ ஆசிரியர் குழு வெளியிட்டுள்ள இரு குறிப்புகள் உலகம் எங்கும் உள்ள அறிவுஜீவிகள் மத்தியில் உணர்வெழுச்சியை உண்டாக்கியுள்ளது.
அமெரிக்கத் தேர்தலில் இம்முறை, குடியரசுக் கட்சியின் வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரான கமலா ஹாரிஸ் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. இந்தப் போட்டியில் டொனால்ட் டரம்ப் முன்னணியில் இருக்கிறார் என்றும் சொல்லலாம். நவம்பர் 5ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள சூழலில், ‘நியு யார்க் டைம்ஸ்’ நாளிதழ் இந்தத் தேர்தலில் அமெரிக்கர்கள் ஏன் ட்ரம்புக்கு வாக்களிக்கக் கூடாது என்ற பொருளில் இரு குறிப்புகளை வெளியிட்டுள்ளது. ‘ட்ரம்ப் சகாப்தத்தை முடிவுக்குக் கொண்டுவர வாக்களியுங்கள்!’ என்று தலைப்பிடப்பட்ட முதல் குறிப்பு “அமெரிக்காவுக்குத் தலைமை தாங்க தகுதியற்றவர் ட்ரம்ப்” என்று கூறுகிறது.
“ஜனநாயகத்துக்கான அச்சுறுத்தல்” என்று அது ட்ரம்பை வர்ணிக்கிறது. “டொனால்ட் ட்ரம்பின் அபாயங்கள் பற்றி அவரை நெருங்கி அறிந்தவர்களிடமிருந்து வரும் தகவல்கள்” என்று தலைப்பிடப்பட்டுள்ள அடுத்த குறிப்பானது, அமெரிக்காவை தலைமை தாங்கி நடத்தத் தகுதியற்றவர் என்று தி நியூயார்க் டைம்ஸ் ஆசிரியர் குழு முடிவெடுக்க, அவரைச் சுற்றியிருந்தவர்கள் அவரைப் பற்றி சொல்லும் விஷயங்களும் ஒரு காரணம் என்று சொல்கிறது. அளவில் சிறியதாக இருந்தாலும், மிகக் கூர்மையாக எழுதப்பட்டுள்ள இந்தக் குறிப்புகள் அமெரிக்காவைக் கடந்தும் விவாதிக்கப்படுகின்றன.
அமெரிக்காவின் இரு பிரதான கட்சிகளில் ஒன்றான குடியரசு கட்சி, அதன் வேட்பாளர் ஒரு முன்னாள் அதிபர், அடுத்து அதிபராகும் வாய்ப்புள்ளவர் என்ற பின்னணிகளை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, மக்கள் பக்கத்தில் நின்று அமெரிக்காவின் எதிர்காலத்துக்கு எது நல்லதோ அதை அச்சமின்றி உரக்கச் சொல்வோம் என்ற தொனியில் எழுதியுள்ள இந்தக் குறிப்புகளும், ட்ரம்புக்கு எதிராக அது தொடர்ந்து வெளியிட்டுவரும் கட்டுரைகளும் நியூ யார்க் டைம்ஸ் நாளிதழின் துணிச்சலுக்கு மட்டும் அன்றி, அமெரிக்கச் சமூகத்தில் நிலவும் ஜனநாயகச் சூழல், சகிப்புத்தன்மைக்கும் ஓர் உதாரணம் என்று அறிவுஜீவிகள் புகழ்கிறார்கள்.
உண்மையான ஜனநாயகம் என்பது ஒரு நாட்டில் நிலவும் கருத்து சுதந்திரத்தாலும் அளவிடப்படுகிறது என்பது உண்மைதானே!