பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் விரோதிகள் அல்ல: வெங்கய்ய நாயுடு பேச்சு
பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் அரசியல் போட்டியாளர்கள் ஆனால் விரோதிகள் அல்ல என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கூறினார்.
மாநிலங்களவைத் தலைவராக இன்று பொறுப்பேற்றுக்கொண்ட குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, அவையில் நடவடிக்கைகளை சீர்குலைப்பதை விடுத்து பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக விவாதங்கள் நடத்தி முடிவுகளை எடுக்க வேண்டும். அவையில் கூச்சல் குழப்பம் நிலவும்போது மசோதாக்களை நிறைவேற்றுவதில் தமக்கு உடன்பாடில்லை. பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் அரசியல் போட்டியாளர்கள் ஆனால் விரோதிகள் அல்ல. இதை மனதில் கொண்டு அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்.
நான் ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தை சேர்ந்தவன். எந்தவித பின்னணியும் இல்லாமல் வளர்ந்தவர். மாநிலங்களவையில் கட்சிகளின் பலம் எதுவாக இருந்தாலும், முக்கிய விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவிக்க அனைவருக்கும் வாய்ப்பளிக்கப்பட வேண்டும். ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகளுக்கு கருத்து தெரிவிக்கும் உரிமை உள்ளது. அதே நேரத்தில் முடிவுகளை அரசுதான் எடுக்கவேண்டும் என்று வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.