உப்பு, சர்க்கரையில் கலந்துள்ள மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள்... அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்😱

இந்தியாவில் விற்பனையாகும் உப்பு, சர்க்கரை பிராண்டுகள் அனைத்திலும் நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் கலந்துள்ளதாக தற்போதைய ஆய்வில் திடுக்கிடும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
 டாக்ஸிக்ஸ் லிங்க்
டாக்ஸிக்ஸ் லிங்க் முகநூல்
Published on

சுற்றுச்சூழல் ஆராய்ச்சி அமைப்பான டாக்ஸிக்ஸ் லிங்க்கானது (Toxics Link) உப்பு மற்றும் சர்க்கரையில் நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் என்ற தலைப்பில் ஆராய்ச்சி ஒன்றை மேற்கொண்டது. இதில் கல் உப்பு, கடல் உப்பு, பொடி உப்பு என 10 வகையான உப்புகளும் நாம் சந்தைகள் மற்றும் கடைகளில் வாங்கும் ஐந்து வகையான சர்க்கரைகளும் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. தொடர்ந்து அந்த உப்பு மற்றும் சர்க்கரைகளின் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது.

சோதனையின் முடிவில், அந்த உப்பு மற்றும் சர்க்கரையில் ஃபைபர், துகள்கள், பிலிம்கள் என பல்வேறு வடிவங்களில் மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த மைக்ரோ பிளாஸ்டிக்கின் அளவு என்பது 0.1 மிமீ முதல் 5 மிமீ வரை இருந்தாகவும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், மைக்ரோபிளாஸ்டிக்ஸ் மிக அதிக அளவு அயோடைஸ்டு (Iodized) உப்புகளில்தான் உள்ளது என்றும், இது பல வண்ணங்களிலும், பல கோணங்களிலும் உள்ளது என்றும் தெரியவந்துள்ளது.

இது குறித்து டாக்ஸிக்ஸ் லிங்க் நிறுவனத்தின் இயக்குநர் தெரிவிக்கையில், “எங்கள் ஆய்வின் நோக்கம் அறிவியல் தரவுத்தளத்திற்கு மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் குறித்த தரவு தொகுப்பில் பங்களிப்பதாகும். உலகளாவிய பிளாஸ்டிக் ஒப்பந்தங்கள் குறித்த பிரச்னைகளை உறுதியாக மற்றும் கவனமாக கையாள இது உதவியாக இருக்கும். மேலும், மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் ஏற்படுத்தும் ஆபத்தை குறைக்கக்கூடிய தொழில்நுட்பம் தொடர்பாக ஆராய்ச்சியாளர்களின் கவனத்தை ஈர்ப்பதற்கும் இந்த ஆய்வானது முன்னெடுப்பாக பார்க்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

டாக்சிக்ஸ் லிங்க் இணை இயக்குனர் சதீஷ் சின்ஹா ​​மேலும் கூறுகையில், “எங்கள் ஆய்வானது அனைத்து உப்பு மற்றும் சர்க்கரை மாதிரிகளிலும் கணிசமான அளவு மைக்ரோ பிளாஸ்டிக் இருப்பதைக் கண்டறிந்துள்ளது. மேலும், மனித ஆரோக்கியத்தில் மைக்ரோ பிளாஸ்டிக்ஸின் நீண்டகால உடல்நல பாதிப்புகள் பற்றிய அவசர, விரிவான ஆராய்ச்சிக்கு அழைப்பு விடுக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

 டாக்ஸிக்ஸ் லிங்க்
’Breast pump’ பயன்படுத்தும் அம்மாவா நீங்கள்..? எனில் இந்த ஆலோசனைகள் உங்களுக்குத்தான்!

எந்தளவு மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள்

Microplastics in salt & sugar
Microplastics in salt & sugar

உப்பு மாதிரிகளில் மைக்ரோப்பிளாஸ்டிக்கின் செறிவு என்பது -

ஒரு கிலோ உலர் எடையில், 6.71 முதல் 89.15 துண்டுகள் வரை உள்ளது.

  • அயோடைஸ்டு உப்பில் - 1 கிலோவிற்கு - 89.15 துண்டுகள்.(மிக அதிக அளவு)

  • கரிம பாறை உப்பில் - 1 கிலோவிற்கு - 6.70 துண்டுகள் (மிக குறைந்த அளவு)

  • சர்க்கரை மாதிரிகளில் - 1 கிலோவிற்கு - 11.85 - 68.25 துண்டுகள்

என்றுள்ளது. பிளாஸ்டிக் என்பது சுற்றுச்சூழலுக்கு மட்டும் இல்லாமல் மனித உடலுக்கும் கேடு விளைவிக்கக்கூடியது. அது தற்போது நேரடியாக நம் உடலுக்குள் செல்கிறது என்பதை இந்த ஆய்வு உறுதிபடுத்தி உள்ளது.

தாய்ப்பால் குடிக்கும் பச்சிளம் குழந்தைகள் மட்டுமல்ல... இன்னும் இந்த மண்ணையே பார்க்காத கருவிலுள்ள குழந்தைகளின் நுரையீரல், இதயத்தில்கூட இந்த மைக்ரோ பிளாஸ்டிக் இருக்கிறதென இந்த சமீபத்திய ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது என்பது கூடுதல் தகவல்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com