புதிதாக வெளியாக உள்ள 100 ரூபாய் நோட்டை ஏடிஎம் இயந்திரங்களில் வைக்கும் வகையில் அவற்றை மாற்றியமைக்க, 100 கோடி ரூபாய் செலவாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
ரிசர்வ் வங்கி கடந்த சில வருடங்களாக ரூபாய் நோட்டில் மாற்றங்களை செய்து வருகிறது. 2000, 500, 200, 50, 10 ரூபாய் நோட்டுகளை புதிய வடிவில் வெளியிட்ட ரிசர்வ் வங்கி இப்போது புதிய 100 ரூபாய் நோட்டை வடிவமைத்துள்ளது. இந்த ரூபாய் நோட்டுகள் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் புதிய ரூபாய் நோட்டுகளை ஏடிஎம் இயந்திரங்களில் வைக்கும் வகையில் மாற்றியமைக்க, 100 கோடி ரூபாய் செலவாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. ஏடிஎம் செயல்பாட்டு சேவைகளை கவனிக்கும் நிறுவனங்களின் கூட்டமைப்பு இதைத் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் 2 லட்சத்து 40 ஆயிரம் ஏடிஎம் இயந்திரங்கள் உள்ளதாகவும் இவற்றில் புதிய மற்றும் பழைய 100 ரூபாய் தாள்களை ஒரே நேரத் தில் வைப்பது சவாலான பணி என்றும் இந்த அமைப்பின் இயக்குநர் பாலசுப்பிரமணியன் தெரிவித்தார். புதிய மற்றும் பழைய நூறு ரூபாய் தாள்களை ஒரே நேரத்தில் வைக்கும் வகையில் ஏடிஎம்களை மாற்றியமைக்க 12 மாதங்கள் ஆகும் என ஹிட்டாச்சி பணப்பட்டுவாடா சேவை கள் நிறுவனத்தின் இயக்குநர் லோனி ஆன்டனி தெரிவித்தார்.
புதிதாக வெளியாக உள்ள 100 ரூபாய் தாள் பழைய தாள்களை காட்டிலும் 7 மில்லி மீட்டர் உயரமும் 15 மில்லி மீட்டர் நீளமும் குறைவாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.