ஊதியம், பி.எஃப் தொகையில் மாற்றம்: புதிய ஊதியக் கொள்கையை அமல்படுத்த அரசு தீவிரம்

ஊதியம், பி.எஃப் தொகையில் மாற்றம்: புதிய ஊதியக் கொள்கையை அமல்படுத்த அரசு தீவிரம்
ஊதியம், பி.எஃப் தொகையில் மாற்றம்: புதிய ஊதியக் கொள்கையை அமல்படுத்த அரசு தீவிரம்
Published on

புதிய ஊதியக் கொள்கையை ஏப்ரல் 1 முதல் அமல்படுத்துவதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இது, ஊழியர்களின் ஊதியம், பி.எஃப், கிராச்சுவிட்டி முதலானவற்றில் மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

'The Wage Code 2019' என்ற சட்ட மசோதா கடந்த 2019-ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது. ஏப்ரல் மாதம் முதல் இது அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான விதிகளை இறுதி செய்யும் பணிகளை மத்திய தொழிலாளர் நலத்துறை மேற்கொண்டு வருகிறது. இந்தச் சட்ட மசோதாவின் மூலமாக வாரத்திற்கு 4 நாள் வேலை, கூடுதல் பணி நேரம் உள்ளிட்டவற்றில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.

இதில் குறிப்பாக, காஸ் டு கம்பெனி எனப்படும் சிடிசி-யில் மாற்றங்கள் நிகழும் என்று கூறப்படுகிறது. புதிய தொழிலாளர் சட்டத்தின்படி, சிடிசியில் மாற்றங்களை கொண்டுவர நிறுவனங்கள் கட்டாயப்படுத்தப்படும்.

தொழிலாளர் ஒருவரின் ஊதியம் என்பது அடிப்படை சம்பளம், அகவிலைப்படி, இதர சலுகைகளை உள்ளடக்கி வழங்கப்படுகிறது. இதில் பொதுவாக, மொத்த சம்பளத்தில் அடிப்படை சம்பளம், அகவிலைப்படியின் அளவு குறைவாகவும், இதர சலுகைகள் அதிகமாகவும் இருக்கும். ஏனென்றால், தொழிலாளியின் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியை பொறுத்தே பிஎஃப் கட்டணம் செலுத்தப்படும். அதனால்தான் அடிப்படை சம்பளம், அகவிலைப்படியின் அளவு குறைவாக இருக்கிறது.

இந்நிலையில் தற்போது மாற்றியமைக்கப்படும் தொழிலாளர் சட்டத்தின்படி, 50 சதவீதத்திற்கு மேல் இதர சலுகைகள் இருக்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதன்காரணமாக தொழிலாளர்கள் வீட்டுக்கு எடுத்துச்செல்லும் பணம் குறைவாகவும், நிறுவனத்தின் சார்பில் செலுத்தப்படும் பிஎஃப் கட்டணம் அதிகமாகவும் இருக்கும். பணியாளர்கள் வீட்டுக்கு எடுத்து செல்லும் தொகை குறைவாக இருந்தாலும் அந்த தொகை பிஎஃப்-ல் இருக்கும். ஒய்வு காலத்தில் பயனுள்ளதாக இருக்கும்.

ஆனால், இந்த புதிய விதிமுறையால் நிறுவனங்கள் பிஎஃப் தொகையை கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கும். சில நிறுவனங்கள் `காஸ்ட் டு கம்பெனி' (சிடிசி) என்னும் நடைமுறையில் செயல்படுகின்றன. ஒரு பணியாளர்களுக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பதை முடிவெடுத்துவிடுகின்றன. சில நிறுவனங்கள் அந்த முறையில் இல்லாமல் செயல்படுகின்றன. பணிக்கொடை உள்ளிட்டவற்றை நிறுவனம் கொடுக்கிறது. திடீரென பிஎஃப்-க்கு செலுத்தும் தொகையும் பணிக்கொடைக்கு செலுத்தும் தொகையும் அதிகரித்தால் அவர்களுக்கு கூடுதல் நிதி சுமை ஏற்படும்.

இதில் நிறுவனங்களுக்கு மற்றொரு நெருக்கடி என்னவென்றால், புதிய விதிகளுக்கு முன்னதாக வழங்கப்பட்ட கடிதத்தில் எவ்வளவு சம்பளம், இதர சலுகைகள் எவ்வளவு என்பது குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால், புதிய விதிமுறைகளால் அதன் அளவுகளில் மாற்றம் ஏற்படும் காரணத்தால், மொத்த தகவல்களையும் மாற்றி தர வேண்டும். விதிகளின் படி, மாற்றும் போது, தற்போது வாங்கும் சம்பளத்தைவிட குறைவாக இருக்கும் என்பதால் நிறுவனத்தில் சலசலப்புகளுக்கு வாய்ப்புள்ளது.

இதைக் களைய வேண்டும் என்றால் சம்பளத்தை மாற்றி அமைத்து புதிய கடிதம் வழங்க வேண்டும். அதாவது, மறைமுகமாக ஊதியத்தை உயர்த்த வேண்டிய சூழல் இருக்கும். அதனால் நிறுவனங்களுக்கும் இதில் சிக்கல் உள்ளன. அதேபோல மற்றொரு புறம், புதிய தொழிலாளர் சட்டத்தின் கீழ் தற்போதுள்ள கூடுதல் நேர வரம்பு மாற்றி அமைக்கப்படும். திட்டமிடப்பட்ட நேரத்தை தாண்டி 15 நிமிடம் வேலை செய்தால் அது கூடுதல் நேரம் ஓவர் டைம் ஆக கருதப்படும். இந்த கூடுதல் நேரத்திற்கான பணத்தை நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு செலுத்த வேண்டியிருக்கும்.

அதாவது, வேலை நேரம் முடிந்ததும், ஒரு ஊழியர் 15 நிமிடங்கள் கூடுதலாக வேலை செய்தால், நிறுவனம் அதற்கு பணம் செலுத்த வேண்டும். புதிய தொழிலாளர் சட்டங்கள் தொடர்பாக தொழிலாளர் அமைச்சகம் அனைத்து பங்குதாரர்களிடமும் ஆலோசனை நடத்தியுள்ளது. இந்த மாத இறுதிக்குள் அனைத்து செயல்முறைகளும் நிறைவடையும். இதன் பின்னர், விதிகளை அமல்படுத்தும் செயல்முறை தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com