பெரும்பான்மையை நிரூபித்த அரசு; ஆனாலும் சிக்கலில் புதிய முதல்வர்.. கலக்கத்தில் ஹரியானா பாஜக!

ஹரியானா சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற வாக்கெடுப்பில் பாஜக தனது பெரும்பான்மையை நிரூபித்து மீண்டும் ஆட்சியை கைப்பற்றிருக்கிறது.
நயாப் சிங் சைனி
நயாப் சிங் சைனிani
Published on

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேலைகள் நாடு முழுவதும் வேகம்பிடித்து வரும் நிலையில், ஹரியானா மாநிலத்தில் பாஜக முதல்வர் மனோகர் லால் கட்டார், அனைத்து அமைச்சர்களுடன் கூண்டோடு நேற்று ராஜினாமா செய்திருந்தது சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.

மனோகர் லால் கட்டார்
மனோகர் லால் கட்டார்

ஹரியானா மாநிலத்தில் மொத்தம் 90 சட்டப்பேரவை தொகுதிகள் இருக்கின்றன. இதில் பெரும்பான்மைக்கு 46 தொகுதிகள் தேவை. இந்த நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 40 இடங்களிலும், காங்கிரஸ் 31 இடங்களிலும், ஜனநாயக ஜனதா கட்சி (ஜேஜேபி) 10 இடங்களிலும், இந்திய தேசிய லோக் தள் மற்றும் ஹரியானா லோகித் கட்சி தலா 1 இடத்திலும் வெற்றிபெற்றிருந்தன.

அதேபோல, சுயேட்சை வேட்பாளர்கள் 7 தொகுதிகளில் வென்றிருந்தனர். இந்தச் சூழலில் பாஜகவுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்காததை அடுத்து, ஜனநாயக ஜனதா கட்சியுடன் (ஜேஜேபி) இணைந்து பாஜக ஆட்சியில் அமர்ந்தது. முதல்வராக மனோகர் லால் கட்டார் பொறுப்பேற்றார். கூட்டணிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டிருந்தது. துணை முதல்வராக ஜனநாயக் ஜனதா கட்சியின் துஷ்யந்த் சவுதாலா பதவியேற்றார்.

நயாப் சிங் சைனி
ஹரியானாவின் புதிய முதல்வராகிறார் நயாப் சிங் சைனி! தொடர்ந்த அரசியல் குழப்பத்துக்கு முற்றிப்புள்ளி?

இந்த நிலையில், மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், ஜேஜேபி தனது ஆதரவை விலக்கிக்கொண்டது. எனவே நேற்று (மார்ச் 12) முதல்வர் கட்டார் உட்பட அனைத்து அமைச்சர்களும் கூண்டோடு ராஜினாமா செய்தனர். இது, ஹரியானா மாநிலம் மட்டுமல்லாது, நாடு முழுவதும் பேசுபொருளானது.

ஆனாலும் நேற்று மாலையே சுயேட்சை எம்எல்ஏக்களின் ஆதரவுடன் பாஜக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது. இந்த முறை பாஜக சார்பில், நயாப் சிங் சைனி முதல்வர் ஆனார். இந்நிலையில், நயாப் சிங் தலைமையிலான அரசாங்கம் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொண்டது. ஹரியானா சட்டப்பேரவையில் காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த வாக்கெடுப்பில் பாஜக தனது பெரும்பான்மையை நிரூபித்து மீண்டும் ஆட்சியை கைப்பற்றிருக்கிறது.

நயாப் சிங் சைனி
நயாப் சிங் சைனி

90 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில், பாஜகவைச் சேர்ந்த 41 எம்எல்ஏக்களும், 7 சுயேட்சை எம்எல்ஏக்களில் 6 பேரும், ஹரியானா லோகித் கட்சி எம்.எல்.ஏ ஒருவர் என மொத்தம் 48 எம்எல்ஏக்கள் நயாப் சிங் சைனிக்கு ஆதரவாக ஓட்டளித்தனர்.

இதற்கிடையே ஹரியானாவின் புதிய முதலமைச்சராக நயாப் சிங் சைனி நியமனத்திற்கு எதிராக பஞ்சாப்-ஹரியானா உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள சைனி, தனது பதவியை ராஜினாமா செய்யாமல் முதலமைச்சராக பதவியேற்று, ரகசிய காப்புப்பிரமாணம் எடுத்துக் கொண்டது அரசியலமைப்பு மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை மீறும் செயல் என குற்றம்சாட்டி அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: 2019 - 24 | 22,217 தேர்தல் பத்திரங்கள் விற்பனை... 10 நாளில் 3,346... முழு விவரங்களையும் அளித்த SBI!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com