'யுவ மோர்ச்சா' டு உத்தராகண்ட் முதல்வர்... யார் இந்த தீரத் சிங் ராவத்?!

'யுவ மோர்ச்சா' டு உத்தராகண்ட் முதல்வர்... யார் இந்த தீரத் சிங் ராவத்?!
'யுவ மோர்ச்சா' டு உத்தராகண்ட் முதல்வர்... யார் இந்த தீரத் சிங் ராவத்?!
Published on

அடுத்த ஆண்டு உத்தராகண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், ஆளும் பாஜக கட்சியில் ஏற்பட்ட உட்கட்சி பூசல்கள் காரணமாக அம்மாநில பாஜக முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தனது பதவியை ராஜினாமா செய்தார். உத்தராகண்ட் மாநிலத்தின் அடுத்த முதல்வராக, மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நியமிக்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. ஆனால், இன்று புதிய திருப்பமாக ரமேஷ் பொக்ரியாலுக்கு பதிலாக தீரத் சிங் ராவத் முதல்வர் பதவியேற்பார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவர் யார் என்பது குறித்து பார்ப்போம்.

திரிவேந்திர சிங் ராவத் செவ்வாய்க்கிழமை முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, உத்தராகண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராக தீரத் சிங் ராவத் இருப்பார் என டெஹ்ராடூனில் தொடங்கிய பாஜக சட்டமன்றக் கட்சி கூட்டத்தின்போது முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

56 வயதான தீரத் சிங் ராவத் 2013 முதல் 2015 வரை உத்தராகண்டின் பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருந்தார். கடந்த காலங்களில் உத்தராகண்ட் எம்.எல்.ஏ.வாகவும் இருந்துள்ளார். மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க், உத்தராகண்ட் மந்திரி தன் சிங் ராவத் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இருக்கும்போது, தீரத் சிங் பெயர் முதல்வர் பதவிக்கு தேர்ந்தெடுக்கபட்டுள்ளது.

யார் இந்த தீரத் சிங் ராவத்?!

உத்தரப் பிரதேச பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவின் மாநில துணைத் தலைவராக இருந்தவர் தீரத் சிங். 1997-ஆம் ஆண்டில், அவர் உத்தரப் பிரதேச சட்டப்பேரவை உறுப்பினராகவும், உத்தரப் பிரதேச சட்டப்பேரவைக் குழுவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். புதிதாக அமைக்கப்பட்ட உத்தராகண்ட் மாநிலத்தின் முதல் கல்வி அமைச்சராக இருந்தார். 2007-ல் உத்தராகண்ட் மாநில பொதுச் செயலாளராக தீரத் சிங் ராவத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2012ல் சட்டப்பேரவை உறுப்பினராக (எம்.எல்.ஏ) தேர்ந்தெடுக்கப்பட்டார். 2013-இல் அவர் உத்தராகண்ட் பாஜக தலைவரானார்.

உத்தராகண்ட் பாஜக தலைவராக இருந்தபோது நான்கு மேயர் பதவிகளை வென்றார். தீரத் சிங் ராவத் 2013 பிப்ரவரி 9 முதல் 2015 டிசம்பர் 31 வரை உத்தராகண்ட் பாஜக தலைவராக அவரே தொடர்ந்தார். உத்தராகண்டின் சவுப்த்தகல் தொகுதியில் வெற்றி பெற்று (2012 முதல் 2017 வரை) சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தார். மேலும், உத்தராகண்ட் மாநிலத்தின் கர்வாலைச் சேர்ந்த எம்.பியாக இருக்கிறார். ராஷ்டிரிய சுயம் சேவக்கின் பின்னணியைக் கொண்ட தீரத் சிங், ஆர்.எஸ்.எஸ்ஸுடன் நெருக்கம் காட்டுபவர். ஒரு காலத்தில் கி.மு.கந்தூரியின் நம்பிக்கைக்குரியவராகக் கருதப்பட்ட அவர், மாநிலக் கட்சியின் தலைவராகவும் இருந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com