அயோத்தியில் கட்டப்பட உள்ள பிரமாண்ட மசூதி.. அடிக்கல் நாட்டு விழாவிற்கு மெக்கா இமாம் வருகை?

அயோத்தியில் கட்டப்பட இருக்கும் மசூதியின் அடிக்கல் நாட்டும் விழாவுக்கு மெக்காவிலிருந்து இமாம் வருகை தர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அயோத்தி மசூதி
அயோத்தி மசூதிட்விட்டர்
Published on

உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தி ராம ஜென்ம பூமி வழக்கில் கடந்த 2019ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து, ராமர் பிறந்த இடம் என நம்பப்படும் அயோத்தியின் ராம ஜென்ம பூமியில் பிரம்மாண்ட கோயில் கட்டப்பட்டு வருகிறது. இந்தக் கோயிலின் கட்டுமானப் பணிகள் முடிந்து அடுத்த வருடம் ஜனவரி 22ஆம் தேதி ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இக்கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க வருமாறு ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த சேக்ஷத்ரா அறக்கட்டளையால் 7,000 பிரமுகர்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: ”தாமதமானாலும் நல்ல தீர்ப்பு”- பாலியல் வன்கொடுமை வழக்கில் உ.பி. பாஜக எம்.எல்.ஏ-க்கு 25 ஆண்டுகள் சிறை!

இந்த நிலையில், அயோத்தியில் இடிக்கப்பட்ட பாபர் மசூதிக்குப் பதிலாகப் புதிதாகக் கட்டப்படவுள்ள முகம்மது பின் அப்துல்லா மசூதிக்கு அடிக்கல் நாட்டுவதற்காக மெக்காவிலிருந்து இமாம் வருகை தர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அயோத்தியிலிருந்து 25 கி.மீ. தொலைவிலுள்ள தானிபூர் என்ற இடத்தில், அயோத்தி பிரச்னையில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு இணங்க முஸ்லிம்களுக்கு உத்தரப்பிரதேச அரசு வழங்கிய இடத்தில் புதிய மசூதி கட்டப்படவுள்ளது. இது, இந்தியாவிலேயே மிகப்பெரிய மசூதியாக இருக்கும் எனவும், தாஜ்மஹாலைவிட மிளிரக்கூடியதாக இந்த மசூதி இருக்கும் எனவும் புதிய மசூதிக்கு நபிகளின் நினைவாக முகமது பின் அப்துல்லா மசூதி எனவும் பெயரிடப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த மசூதி 5 மினார்கள், இஸ்லாமிய மார்க்கத்தின் 5 தூண்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அமைக்கப்படவுள்ளன எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், இந்த மசூதியுடன் புற்றுநோய் மருத்துவமனை, பள்ளி, கல்லூரி, அருங்காட்சியகம், நூலகம் மற்றும் முழுமையான சைவ உணவகம் ஆகியவை அமைக்கப்படவுள்ளன எனவும் தகவல் வெளியாகி உள்ளது. இம்மசூதியின் மேம்பாட்டுக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மும்பையைச் சேர்ந்த பாஜக தலைவர் ஹாஜி அராபத் ஷேக், ”21 அடி உயரம் மற்றும் 36 அடி அகலம் கொண்ட உலகின் மிகப்பெரிய குர்ஆன் இங்கு வைக்கப்பட வாய்ப்புள்ளது” என தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், இம்மசூதியின் அடிக்கல் நாட்டும் விழாவுக்கு மெக்காவிலிருந்து இமாம் வருகை தர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அப்போது, இம்மசூதியின் வடிவமைப்பும் வெளியிடப்படவுள்ளது.

இதையும் படிக்க: எம்.பி. பதவி நீக்கத்திற்கு எதிராக மஹுவா மொய்த்ரா தொடர்ந்த வழக்கு - ஜன.3இல் விசாரணை!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com