“எங்கள் உத்தரவுகளோடு விளையாடாதீர்கள்” - சிபிஐக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

“எங்கள் உத்தரவுகளோடு விளையாடாதீர்கள்” - சிபிஐக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை
“எங்கள் உத்தரவுகளோடு விளையாடாதீர்கள்” - சிபிஐக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை
Published on

‘நீதிமன்ற உத்தரவுகளோடு விளையாட வேண்டாம் என்று சிபிஐ முன்னாள் இடைக்கால இயக்குநர் நாகேஸ்வர ராவுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

முசாபர்பூர் விடுதியில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. அப்போது, இந்த வழக்கை விசாரித்து வந்த சிபிஐ இணை இயக்குநர் ஏ.கே.சர்மா பணி மாற்றம் செய்யப்பட்டது குறித்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு கடுமையான ஆட்சேபனை தெரிவித்தது. 

“இதனை நாங்கள் மிகவும் தீவிரமாக கையில் எடுக்கப் போகிறோம். உச்சநீதிமன்றத்தின் உத்தரவுடன் நீங்கள் விளையாடியிருக்கிறீர்கள். கடவுள்தான் உங்களை காப்பாற்ற வேண்டும். உச்சநீதிமன்ற உத்தரவுகளோடு விளையாடாதீர்கள்” என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்தார். 

அத்துடன், சர்மாவின் பணி மாற்றத்தில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து தற்போதைய சிபிஐ இயக்குநர் ரிஷிகுமார் சுக்லா பிப்ரவரி 11ம் தேதி பதில் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். அதேபோல், இடைக்கால இயக்குநராக இருந்த நாகேஸ்வர ராவ் மற்றும் சர்மாவின் மாறுதலில் தொடர்புடைய அதிகாரிகள் பிப்ரவரி 12ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

ஏ.கே.சர்மா சிபிஐ-யில் இருந்து சி.ஆர்.பி.எஃப் கூடுதல் இயக்குநராக பணிமாற்றம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் தங்கள் அனுமதியில்லாமல் விசாரணை அதிகாரிகள் யாரும் மாற்றப்படக் கூடாது என்று உச்சநீதிமன்ற தெரிவித்திருந்தது. 

இதனிடையே, டெல்லியில் உள்ள போஸ்கோ நீதிமன்றம் மீதி விசாரணையை அடுத்த 6 மாதத்திற்குள் முடிக்கும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். “பீகாரில் உள்ள 110 விடுதிகளின் விவரங்களை தாக்கல் செய்யுங்கள். அதில் எத்தனை ஆண்கள் மற்றும் எத்தனை பெண்கள் உள்ளார்கள்?. அரசின் உதவி எப்படி அந்த விடுதிகளுக்கு செல்கிறது? என்பது குறித்தும் விவரங்களை தெரிவியுங்கள்” என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com